Being Nikkil Murugan.. 28 வருட கால ஓட்டம்.. 555 தாண்டியாச்சு.. திரைத்துறையின் ஹைடெக் PRO!
சென்னை: தமிழ்த் திரையின் தவிர்க்க முடியாத அம்சங்களில் ஒன்றாக இருப்பது மிகப் பெரிய விஷயம்.. ரொம்ப ஸ்பெஷலானது.. அப்படிப்பட்ட அம்சங்களில் ஒரு நபருக்கு முக்கிய இடம் உண்டு.. அவர்தான் நிகில் முருகன்.
பிஆர்ஓ என்பது ஆரம்பகாலத்தில் ஒரு போஸ்ட்மேன் வேலை போலத்தான் இருந்தது. கலைஞர்கள், தயாரிப்பாளர்களிடமிருந்து தகவல்களை ஊடகங்களுக்குக் கொண்டு போய் சேர்ப்பதுதான் பிரதான வேலையாக அப்போது இருந்தது. ஆனால் நவீனங்களுக்கு உலகம் மாறத் தொடங்கியபோது பிஆர்ஓக்களின் வேலையும் வேற லெவலுக்கு மாற ஆரம்பித்தது.
அப்படிப்பட்ட மாற்றங்களை அது வரும்போதே எடுத்துக் கொண்டு தானும் மாறி, தனது வேலைகளையும் மாடர்னாக்கி பிஆர்ஓக்களிலேயே டெக்கி சவ்வியாக உருவெடுத்து அசத்தியவர் நிகில் முருகன். மின்னல் வேகம், புத்திசாலித்தனம், பிசிறு இல்லாத வேலை, பர்பெக்ட் என்று பல அடையாளங்கள் இவருக்கு உண்டு.
ரஜினி ரசிகராக இருந்து , ரசிகர் மன்றத் தலைவராகவும் செயல்பட்டு, எதிர்பாராத வகையில் பாபா படம் மூலம் பிஆர்ஓவாக மாறியவர்தான் நிகில் முருகன். ரஜினிகாந்த்துக்கு ஆரம்ப காலத்தில் பிஆர்ஓவாக இருந்த நிகில் முருகன், பின்னர் கமல்ஹாசனுக்கும் பிஆர்ஓவாக கிட்டத்தட்ட 14 வருட காலம் பணியாற்றியவர். இரு பெரும் சூப்பர் ஸ்டார்களுக்கு பிஆர்ஓவாக இருந்து இருவரையும் மக்களிடம் மிகச் சரியாக, நேர்த்தியாக கொண்டு சேர்த்த பெருமை இவருக்கும் உண்டு.
ரஜினிகாந்த் முதல் முறையாக கொடுத்த ஒரு பிரஸ் மீட்டை யாராலும் இன்று வரை மறந்திருக்க முடியாது. அந்த பிரஸ்மீட்டை கோ ஆர்டினேட் செய்தவர் நிகில் முருகன். அதேபோல விஸ்வரூபம் சமயத்தின்போதும் மீடியாவை ஒருங்கிணைத்து அனைத்து வேலைகளையும் தனி ஆளாக செய்து அசத்தியவர் நிகில் முருகன்.
கே.பாலச்சந்தர், பாரதிராஜா, விஜய், அஜீத் என்று பலருடனும் நல்ல நட்பில் இருந்தவர், இருப்பவர் நிகில் முருகன். விஜய்யின் கோட் படம் அவருக்கு 555வது படம் என்பது மிகப் பெரிய விஷயம். அஜீத் கல்யாணத்தின்போது அவரது கல்யாணத்திற்கு வருகை தந்த விஐபிக்களின் கார்களை ஓட்டி வந்த டிரைவர்களுக்கும் கல்யாண சாப்பாடு கொடுத்து அஜீத் மூலம் அதை நிறைவேற்றி அசத்தியவர் நிகில் முருகன்.
கடற்கரையில் சுண்டல் சாப்பிடும் ஒரு நபர், அந்த பேப்பரை தூக்கி எறியும்போது அதில் தனது செய்தி இருந்து, அதை அவர் படிக்க நேர்ந்தால் போதும்.. அதுதான் தனது வெற்றி என்று சிம்பிளாக கூறுகிறார் நிகில் முருகன்.
28 வருடத்தை திரைத்துறையில் நிறைவு செய்துள்ளார் நிகில் முருகன். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது வாழ்த்துகளையும் பெற்று வந்துள்ளார் நிகில் முருகன்.
நாமும் வாழ்த்துவோம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்