மழை வெள்ளம்.. பிரதமர் மோடியைச் சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டம்.. டெல்லி விரைந்தார்

Meenakshi
Dec 18, 2023,06:54 PM IST

சென்னை: தென் மாவட்டங்களில் பெய்து வரும் மிக கனமழையால் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பு மற்றும் மிச்சாங் புயல் பாதிப்பு உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசி வெள்ள நிவாரண இழப்பீட்டை விரைவுபடுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி விரைந்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்க அவர் நேரம் கேட்டு கடிதமும் எழுதியுள்ளார். 


மிச்சாங் புயல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படுத்தி சென்ற பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நிலையில், தற்போது தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மிச்சாங் புயலால் எற்பட்ட பாதிப்பு மற்றும் தென் மாவட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் கேட்டு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.


இதையடுத்து பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பினார். அதில்,  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிக கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை 19-12-2023 புது தில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரம் கோரி கடிதம் எழுதி உள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.




இந்த நிலையில் தற்போது கோவை சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து அப்படியே டெல்லி புறப்பட்டுச் சென்றார்.


இந்தியா கூட்டணி கூட்டம்


முன்னதாக, பாஜகவுக்கு எதிராக ஓரணியாக திரண்டுள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி 4வது கூட்டம் நாளை டில்லியில் நடைபெறுகிறது. இதில் ஸ்டாலின் பங்கேற்கிறார். தனது டெல்லி பயணத்தின்போதே பிரதமரையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். 


இந்திய கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும், மூன்றாவது கூட்டம் செப்டம்பர் மாதம் மும்பையிலும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டம் டிசம்பர் 19ம் தேதி நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. 


நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. தற்போது பெய்து வரும் தென் மாவட்டங்களின் கனமழையால் முதல்வர்  இந்த கூட்டத்திற்கு செல்ல மாட்டார் என்று ஒரு தரப்பினர் கூறிவந்தனர். ஆனால் தற்போது முதல்வர் டெல்லி போயுள்ளார்.  பிரதமரைச் சந்திக்கும் நோக்கில்தான் முதல்வர் போயுள்ளதாக திமுக தரப்பு தெரிவிக்கிறது.