Rahul Dravid: விட்ட இடத்துலேயே ஜெயிக்கணும்.. நச்சுன்னு.. நம்ம ராகுல் டிராவிட் மாதிரி..!
பார்படாஸ்: டி20 உலகக் கோப்பையை இந்திய வீரர்கள் மட்டுமல்ல.. மொத்த இந்தியர்களும் நேற்று முதல் மனதில் ஏந்தியபடியே உற்சாகக் களிப்பில் திளைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் அத்தனை சந்தோஷ இதயங்களுக்கு மத்தியில் ஒரு இதயம் மட்டும் மிக மிக சந்தோஷமாக உற்சாகத்தின் உச்சியில் நேற்று குதித்ததைக் காண முடிந்தது.. அவர்தான் ராகுல் டிராவிட்.
இந்திய அணிக்கு கிடைத்த மிக மிக சிறந்த வீரர்களில் ராகுல் டிராவிடுக்கு தனி இடம் உண்டு. அதிகம் பேசாமல், செயலில் காட்டியவர் ராகுல் டிராவிட். இந்திய கிரிக்கெட் அணியின் தூண் என்று வர்ணிக்கப்பட்டவர். அந்தப் பெயரை நிலை நிறுத்தியவர். தனது கிரிக்கெட் கெரியரில் அவர் எல்லாவற்றையும் பார்த்து விட்டார்.
ராகுல் "தூண்" டிராவிட்
நல்ல கேப்டனாக, நல்ல வீரராக, நல்ல விக்கெட் கீப்பராக எல்லா அவதாரத்தையும் பூண்டு விட்டார். அதேபோல கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பயிற்சியாளராக மாறினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அசத்தலாக செயல்பட்டு வருகிறார். இப்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் இருக்கிறார் ராகுல் டிராவிட். அதிர்ஷ்டவசமாக நேற்றைய போட்டிதான் ராகுல் டிராவிடின் கடைசி போட்டி - இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக.
நேற்றைய போட்டியின் முடிவில் ராகுல் டிராவிட் அப்படி துள்ளிக் குதித்தார்.. உற்சாகத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் ஒரு குழந்தை போல அவர் துள்ளியதைப் பார்த்து பலரும் சந்தோஷப்படனர். வீரர்கள் கோப்பையுடன் குதூகலித்துக் கொண்டிருந்தபோது தனது டீமுடன் வீரர்களிடம் ராகுல் டிராவிட் வந்தபோது, விராட் கோலி, உலகக் கோப்பையைக் கொண்டு வந்து ராகுல் டிராவிடம் கொடுத்து, இந்தா தல.. இது உங்களுக்குத்தான் என்று கூறியபோது வெட்கப் புன்னகையுடன் அதை வாங்கிய ராகுல் டிராவிட், கோப்பையை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்து வெறித்தனமாக உற்சாகத்தை வெளிப்படுத்தியபோது மொத்த டீமும் உற்சாகமானது, நெகிழ்ந்து போனது.
2007ல் கிடைத்த வலி
எத்தனை வெறி இருந்திருந்தால் இப்படி உற்சாகத்தை கொண்டாடியிருப்பார் டிராவிட். ஆனால் இதற்கெல்லாம் பின்னால் பலமான வலி உள்ளது. 2007ம் ஆண்டு இதே மேற்கு இந்தியத் தீவுகளில் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இந்தத் தொடரில் ராகுல் டிராவிட்தான் இந்திய அணியின் கேப்டன். சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வீரேந்திர ஷேவாக், யுவராஜ் சிங், தோனி, தினேஷ் கார்த்திக் என ஜாம்பவான்கள் நிறைந்திருந்த அணி அது. ஆனால், அதில் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற இந்தியா தவறியது. குரூப் சுற்றோடு இந்தியா வெளியேறியது.
விளையாடிய 3 போட்டிகளில் குட்டி அணியான பெர்முடாவுடன் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளிடம் தோல்வியைத் தழுவி தனது குரூப்பில் 3வது இடத்தைப் பிடித்து வெளியேறியது. 2007 மார்ச் 17ம் தேதி இந்தியா தனது முதல் சுற்றுப் போட்டியில் வங்கதேசத்துடன் மோதியது. முதலில் ஆடி 49.3 ஓவர்களில் ஆல் ஆவுட் ஆன இந்தியா 191 ரன்களே சேர்த்து அதிர்ச்சி அளித்தது. பின்னர் ஆடிய வங்கதேசம் 48.3 ஓவர்களிலேயே தனது வெற்றி இலக்கை 5 விக்கெட் இழப்புக்கு அடைந்து இந்தியாவை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்போட்டியில் கங்குலி 66 ரன்களும், யுவராஜ் சிங் 47 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களே எடுத்து சொதப்பினர். தோனி, ஹர்பஜன் சிங், அஜீத் அகர்கர் ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். சச்சின் 26 பந்துகளில் 7 ரன்களே எடுத்தார். டிராவிட் பங்கு 14 ரன்களே. இந்திய ரசிகர்களுக்கு பெரும் வேதனை கொடுத்த போட்டி இது.
மார்ச் 19ம் தேதி 2வது போட்டி பெர்முடாவுக்கு எதிராக நடந்தது. இப்போட்டியில் இந்தியா சற்று சுதாரித்து அதிரடியாக விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்களைக் குவித்தது. ஷேவாக் 114 ரன்கள் விளாசியிருந்தார். கங்குலி 89, சச்சின் ஆட்டமிழக்காமல் 57, யுவராஜ் சிங் 83 என ரன்கள் குவித்திருந்தனர். இப்போட்டியில் இந்தியா 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்ச் 23ம் தேதி இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றால் சூப்பர் 8க்கு முன்னேற வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போட்டியில் அதிர்ச்சிகரமாக இந்தியா தோல்வியுற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 254 ரன்களைக் குவிக்க, பின்னர் ஆடிய இந்தியா 185 ரன்களில் ஆல் அவுட் ஆகி பெரும் சோகத்தைக் கொடுத்து விட்டது. இப்போட்டியில் சச்சின், தோனி, டக் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக டிராவிட் 609 ரன்கள் சேர்த்தார். ஷேவாக் 48 ரன்களை எடுத்தார். மற்றவர்கள் சோபிக்கவில்லை. இந்தத் தோல்வியோடு அந்த உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது இந்தியா.
அந்த வெளியேற்றத்தால் ராகுல் டிராவிட் பெரும் வேதனை அடைந்து கண் கலங்கினார். மைதானத்தில் அழுத கண்களுடன் அவரைப் பார்த்த ரசிகர்களும் வேதனை அடைந்தனர்.. நேற்று அதே மேற்கு இந்தியத் தீவுகளில், தனது பயிற்சியின் கீழ் ஆடிய அணி அட்டகாசமாக கோப்பையை வென்ற விதத்தைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய் விட்டார் ராகுல் டிராவிட். 2007ல் பட்ட காயத்திற்கான மருந்து நேற்றுதான் ராகுலுக்கு கிடைத்தது. மொத்த வலியையும் மறந்து ஒரு இளைஞனாக மாறி குதூகலித்த ராகுல் டிராவிடைப் பார்த்து அத்தனை பேருமே சந்தோஷப்பட்டிருப்பார்கள்.
எந்த இடத்தில் விட்டோமோ.. அந்த இடத்திலேயே ஜெயிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.. அதைத்தான் ராகுல் டிராவிட் செய்திருக்கிறார்.. இது எல்லோருக்கும் ஒரு நல்ல உதாரணம்.. வாழ்வில் தோல்வி என்பதே இல்லை.. விழுந்தால் மீண்டும் எழலாம்.. எந்த நேரத்திலும் நமக்கான நொடி வரும்.. அப்போது நம்மை நிரூபிக்க வேண்டும்.. இதுதான் டிராவிட் கற்றுக் கொடுத்துள்ள பாடம்.. இந்திய அணிக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே.