டி20 உலகக் கோப்பை: அரை இறுதியில் ஆப்கானிஸ்தான்.. சரித்திர சாதனை.. ஆஸ்திரேலியா அவுட்!
செயின்ட் வின்சென்ட்: வங்கதேசத்திற்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் போராடி வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்து சரித்திரம் படைத்துள்ளது. உலகக் கோப்பைத் தொடர் ஒன்றின் அரை இறுதிச் சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் முன்னேறுவது இதுவே முதல் முறை என்பதால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை இணந்து நடத்தி வரும் டி20- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் அளித்து இப்போது கிளைமேக்ஸை நெருங்கியுள்ளது.
சுற்றுப் போட்டிகளில் பல முக்கிய அணிகளை சாதாரண அணிகள் தோற்கடித்து ஷாக் கொடுத்தன. உதாரணத்திற்கு பாகிஸ்தான் அணி, அமெரிக்காவிடம் தோற்றது. இந்த நிலையில் சூப்பர் எட்டு போட்டிகள் நடந்து வந்தன. இன்று கடைசிப் போட்டி நடைபெற்றது. இதன் முடிவைப் பொறுத்தே ஆஸ்திரேலியா அணி அரை இறுதிக்கு வருமா வராதா என்ற சூழல் இருந்ததால் பலரும் இன்றைய போட்டியை எதிர்பார்த்தனர்.
இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானும், வங்கதேசமும் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் போட்டி படு விறுவிறுப்பாக இருந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களை அந்த அணி எடுத்தது. வங்கதேச பவுலர்கள் திறமையாக பந்து வீசி ஆப்கானிஸ்தானை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 43 ரன்களைக் குவித்தார். மற்றவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. வங்கதேச பந்து வீச்சாளர் ரிஷாத் ஹுசைன் 3 விக்கெட்களைச் சாய்த்து அசத்தினார். பின்னர் ஆட வந்த வங்கதேசத்தை, ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் துவம்சம் செய்து விட்டனர்.
தன்சித் ஹசன், ஷாகிப் அல் ஹசன், ரிஷாத் ஹுசைன் ஆகியோர் டக் அவுட் செய்யப்பட்டனர். லிட்டன் தாஸ் மட்டும் ஒரு பக்கம் போராடி ரன்களைக் குவித்து வந்தார். 54 ரன்களை எடுத்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. ஆனால் அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஜோடி சேர விடாமல் சூப்பராக தடுத்து அசத்தினர். இதனால் கடைசி வரை போராடிய வங்கதேசம், 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்களில் சுருண்டு விட்டது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், ரஷீத் கான் தலா 4 விக்கெட்களைச் சாய்த்து மிரட்டினர். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டது. இது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரம் ஆகும்.
2010க்குப் பிறகு புதிய வரலாறு
2010ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாட தகுதி பெற்று தனது முதல் சாதனையை நிகழ்த்தியிருந்தது ஆப்கானிஸ்தான். தற்போது 14 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பை போட்டி ஒன்றின் அரை இறுதிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்துள்ளது. அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கவுள்ளது ஆப்கானிஸ்தான். அதிலும் வென்று இறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் முன்னேறினால் அது இமாலய சாதனையாக மாறும்.
ஆப்கானிஸ்தான் பெற்ற அதிரடியான வெற்றியால் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து ஆஸ்திரேலியா வெளியேற்றப்பட்டது. இன்றைய போட்டியின் முடிவை வைத்தே ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு போகுமா இல்லையா என்ற முடிவு காத்திருந்தது. ஆனால் அதில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது ஆப்கானிஸ்தான் அணி என்பதால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஒரு நாள் உலகக் கோப்பையில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா, டி20 உலகக் கோப்பையின் அரை இறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.