Syrian civil war.. டமாஸ்கஸ் நகரில் நுழைந்த புரட்சிப் படை.. சிரியாவை விட்டு தப்பினார் அதிபர் அசாத்

Su.tha Arivalagan
Dec 08, 2024,10:32 AM IST

டமாஸ்கஸ்: சிரியாவின் முக்கிய நகரங்களை  ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் புரட்சிப் படையினர் கைப்பற்றிய நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் நகருக்குள் அவர்கள் நுழைந்ததைத் தொடர்ந்து அதிபர் பஷர் அல் அசாத் நாட்டை விட்டுத் தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 


டமாஸ்கஸை விட்டு வெளியேறிய அவர் எங்கு சென்று தெரியவில்லை. நாட்டை விட்டு வெளியேறியிருக்கக் கூடும் என்ற தகவலும் வருகிறது. அதேசமயம், சிரியாவுக்குள்தான் இருக்கிறார். ஆனால் ரகசிய இடத்தில் பதுங்கியிருப்பாக இன்னொரு செய்தியும் வருகிறது. இதற்கிடையே, அரசு நிர்வாகத்தை புரட்சிப் படையினரிடம் ஒப்படைக்க தான் தயாராக இருப்பதாக பிரதமர் முகம்மது காஸி அல் ஜலாலி கூறியுள்ளார். ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.


புரட்சிப் படையினர் நாட்டுக்குள் நுழைந்து விட்டதாலும், ஆக்ரோஷத்துடன்கள் அவர்கள் முன்னேறி வருவதாலும், சிரியா ராணுவத்தினரும் தங்களது நிலையை தளர்த்தி விட்டனர். டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தைப் பாதுகாத்து வந்த அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர். ராணுவத்தினரில் பலர் புரட்சிப் படையினருக்கு ஆதரவாக மாறி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிரியா தலைநகர் டமாஸ்கஸின் பல பகுதிகளிலிருந்து ராணுவத்தினர் வெளியேறி விட்டனர். சிரியா ராணுவத்துக்கு ஆதரவாக இருந்து வந்த ஹெஸ்புல்லா படையினரும் விலகி விட்டனர்.




புரட்சிப் படையினரின் இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து சிரியாவில் அசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இத்தனை காலமாக ஹெல்புல்லா அமைப்புதான் அசாத் அரசைக் காத்து வந்தது. சிரியா ராணுவத்துடன் இணைந்து அவர்கள் செயல்பட்டு வந்தனர். தற்போது புரட்சிப் படையினரின் கை ஓங்கி விட்டதைத்  தொடர்ந்து ஹெஸ்புல்லா படையினரில் பெரும் பகுதியினர் லெபனானுக்குப் போய் விட்டனர். சில படைப் பிரிவினர் சிரியாவிலேயே லடாக்கியா என்ற நகருக்குள் புகுந்துள்ளனர். 


அசாத் ஆட்சி வீழ்ந்ததை அங்கு மக்கள் கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் அசாத்தின் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. மக்கள் தெருக்களில் கூடி கொண்டாடி வருவதையும் பார்க்க முடிகிறது. கடந்த 13 வருடமாக அசாத் அரசுக்கு எதிராக அங்கு கிளர்ச்சி நடந்து வந்தது. ஆரம்பத்தில் சாதாரண மக்கள் போராட்டமாக இது இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக இது பெரும் போராக வெடித்து நாட்டையே ரத்தக்களறியாக்கி விட்டது.


இதற்கிடையே, புரட்சிப் படையினரிடம் சிக்கி உயிரிழப்பதைத் தவிர்க்க ஈராக் நாட்டுக்குள் சிரியா ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில்  புகுந்து தஞ்சமடைந்து வருகின்றனர் இதுவரை 2000 பேர் வரை வந்திருப்பதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது. அவர்களில் பலர் அதிகாரிகள் ஆவர்.


2012ம் ஆண்டு ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதன் பெயர் அல் நுஸ்ரா என்பதாகும். அடுத்த ஆண்டே இது அல் கொய்தாவுடன் கை கோர்த்தது. 2016ல் அல் கொய்தாவின் உறவை முறித்துக் கொண்டு தனித்து செயல்பட ஆரம்பித்தது. அப்போதுதான் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் என்ற பெயர் சூட்டப்பட்டது. இருப்பினும் அல் கொய்தாவின் ஒரு பிரிவாகவே பலரும் இதைப் பார்த்தனர். இதனால் அந்த முகத்தை மாற்ற எண்ணிய ஹயாத் அமைப்பு, தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினர் பாதிக்கப்படாத வகையில் பார்த்துக் கொண்டது. அவர்களிடம் கணிவாக நடந்து கொண்டது. இதனால் மக்களின் ஆதரவும் இந்த அமைப்புக்குப் பெருகியது.


இட்லிப், அலெப்போ ஆகிய நகரங்களைக் கைப்பற்றிய ஹயாத் அமைப்பு அங்கு நிர்வாகக் கட்டமைப்பையும் உருவாக்கி நிர்வாகமும் செய்து வந்தது. கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த நிலையில் திடீரென 2 மாதங்களாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது ஹயாத் அமைப்பு. தற்போது அசாத் நாட்டை விட்டு ஓடும் அளவுக்கு அதன் தாக்குதல் வீரியம் அடைந்ததால் சிரியாவில் அசாத் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.


புரட்சிப் படையினர் கை ஓங்க முக்கியக் காரணம், ஹெஸ்புல்லா சிரியாவில் பலவீனம் அடைந்ததே. காரணம், இஸ்ரேலுடனான போரில் ஹெஸ்புல்லா பல முக்கியத் தலைவர்களை இழந்து விட்டது. இஸ்ரேல் போரில் கவனம் செலுத்தியதால் சிரியாவிலிருந்து ஏராளமான வீரர்களை அது திரும்பப் பெற்றது. வழி நடத்தத் தலைவர்களும் இல்லாத நிலை காரணமாக அசாத் ஆட்சியைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.  மறுபக்கம் அசாத்துக்கு ஆதரவாக இருந்து வந்த ரஷ்யாவும், உக்ரைன் போரில் கவனம் செலுத்தி வந்ததால் அதன் பிடியும் தளர்ந்து போனது. இதையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு ஹயாத் அமைப்பு அதிரடியாக இறங்கி ஆட்சியை காலி செய்து விட்டது.


இந்த புதிய சூழல் குறித்து அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், சிரியா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்று கூறியுள்ளது. ரஷ்யா, ஹயாத் அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்துள்ளது. ஒரு தீவிரவாத இயக்கத்தின் கையில் சிரியா போவதை அனுமதிக்க முடியாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவரோவ் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்