Sweet Pongal: பள்ளிகளில்.. முக்கிய தலைவர்களின் பிறந்தநாளன்று.. இனிப்பு பொங்கல்.. அரசு உத்தரவு!

Manjula Devi
Jun 18, 2024,04:02 PM IST

சென்னை:  முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் அனைத்து சத்துணவு மையங்களில் மதிய உணவுகள் தினசரி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாள்  அன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாளன்றும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. 




அதன்படி இந்த வருடம் ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, அந்தத் தேதியில் பள்ளிகள் விடுமுறை என்பதால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட 10ம் தேதி மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தை அரசு மேலும் விரிவுபடுத்தியுள்ளது.


இந்த நிலையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் அன்று மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 


இதன்படி தமிழகம் முழுவதும் 43, 131 சத்துணவு மையங்களில்  4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு உடன் சேர்த்து இனிப்பு பொங்கல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரிசி பருப்பு, வெல்லம் என ஒரு மாணவிக்கு 150 கிராமுக்கு இரண்டு ரூபாய் வீதம் மொத்தம்  4. 27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு.