Short Story.. இது கதையல்ல நிஜம்.. மணிமாலாவின் வார்த்தை பலித்தது!

Su.tha Arivalagan
Nov 03, 2024,04:12 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஒரு நடுத்தர குடும்பம் முத்துவேல், வாணி தம்பதியருடையது. அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். ராஜேஸ்வரி (8), மணிமாலா (6).  வாணி மூன்றாவதாக கர்ப்பம் தரித்தாள். ஆனால் அவர்கள் வீட்டில் மாமனார், மாமியார், கணவர் முதற்கொண்டு அனைவரும் மூன்றாவது ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். 


ஆண் குழந்தை என்பதே அவர்களின் ஆசை, ஆவல், கட்டாயமாக இருந்தது. அதற்காக வாணி, கருத்தரித்த நாள் முதல் இருக்காத விரதங்கள் கிடையாது. கோவில் கோவிலாக சென்று பிரார்த்தனை செய்தாள். எந்த அளவிற்கு விரதம் என்றால் மண்டியிட்டு கைகளை பின்னால் கட்டிக் கொண்டு மண் சோறு சாப்பிட்டு என கடுமையான பல விரதங்களை இருந்தாள். 


குழந்தை பிறக்கும், பிரசவம் ஆகும் நாள் வந்தது. வாணிக்கு பயம் மூன்றாவதும் பெண் குழந்தையாக இருந்தால் என்ன செய்வது? என்ற பதற்றம் வேறு. அரசு மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டாள். தங்களுக்கு தம்பியோ, தங்கையோ பிறக்கப் போகிறது. தங்களுடன் விளையாட மற்றொரு ஆள் வரப் போகிறது என்ற ஆவல் ராஜேஸ்வரிக்கும், மணிமாலாவிற்கும். மணிமாலா தனது பாட்டியுடன் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடித்து செல்கிறாள்.




வேறு வழியில்லாமல் மணிமாலாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல தயாராகிறாள் பாட்டி. செல்லும் வழியில் ஜோவென்று மழை. வழியில் ஒரு கடையின் கூரையில் இருவரும் ஒதுங்கி நின்று கொண்டார்கள், பாட்டியும் மணிமாலாவும். அப்போது மணிமாலா, மூன்றாவது குழந்தை பிறந்த உடன் என்னை யாருக்கும் பிடிக்காது, என்னை யாரும் கொஞ்ச கூட மாட்டீர்கள் என குழந்தை தனமாக சோகமான முகத்துடன் பாட்டியிடம் கூறினாள்.


ஆவலும் பயமும் கலந்த உணர்வு அவளுக்கு. குழந்தை பிறந்தது... வாணி பயந்தது போலவே மூன்றாவதும் பெண்.  வாணிக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தை விட வீட்டில் இருப்பவர்கள், குறிப்பாக தன்னுடைய கணவரின் உணர்வு என்னவாக இருக்கும் என்ற பயம் தான் அதிகமாக இருந்தது.. ஆனால் அழகுச்சிலையாக தன் அருகில் இருந்த குழந்தையை பார்த்ததும் வாணிக்கு அனைத்தும் மறந்து போனது. 


வாணி எதிர்பார்த்தது போலவே அவரது கணவர் முத்துவேலுக்கு 3வதும் பெண் குழந்தை பிறந்தது பிடிக்கவில்லை.. ஆஸ்பத்திரிக்கு வந்து வாணியையும், குழந்தையையும் பார்க்கவில்லை. ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்த போதே முத்துவேலிடம் டாக்டர் கையொப்பம் பெற்றுக் கொண்டார். என்னவென்று? எந்த குழந்தையாக இருந்தாலும் சரி, குழந்தை பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்து விடுவேன் என்று. இனி வாணியின் உடம்பு தாங்காது. மூன்று குழந்தைகள் போதும் என்று அட்மிட் செய்த போதே டாக்டர் அறிவுரை கூறி விட்டார் முத்துவேலிடம்.  


பெண் குழந்தை லட்டு போல் அவள் அம்மாவை அச்சடித்தாற் போல் பிறந்திருந்தது. வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். முத்துவேல் அந்தப் பிஞ்சுக் குழந்தையை பார்க்கவே இல்லை. நாட்கள் சென்றன. இரண்டு மாதங்கள் கடந்தது. திடீரென ஒரு நாள் இரண்டாவது பெண் மணிமாலாவிற்கு காய்ச்சல் கொதித்தது. வாணிக்கு மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது. அவளது உடல்நிலையும் ஒத்துழைக்கவில்லை. 


ராஜேஸ்வரிக்கும், மணிமாலாவிற்கும் மூன்றாம் குழந்தையைப் பார்த்ததும் அவ்வளவு மகிழ்ச்சி. மூன்றாவது குழந்தைக்கு சர்வேஸ்வரி என்று பெயர் சூட்டினார்கள்.  காய்ச்சலாக இருந்தாலும் கூட தனது தங்கையைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தாள் மணிமாலா. மணிமாலாவிற்கு நாளுக்கு நாள் காய்ச்சல் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அது மூளையை பாதித்தது. உடல் நிலை மோசமாகி, தன் தாயின் மடியிலேயே உயிர் பிரிந்தது. முத்துவும், வாணியும், ராஜேஸ்வரியும் கதறினர். 


எல்லோருக்கும் அப்போது உறைத்தது இதுதான்.. அது மணிமாலாவின் வார்த்தை... மூன்றாவது குழந்தை வந்து விட்டது . என்னை யாரும் கொஞ்ச மாட்டீர்கள் என்பது.. குறிப்பாக முத்துவேல் மனதை அது அறுத்துப் போட்டது.. பெரியவளுக்கு ராஜேஸ்வரி என்றும், மூன்றாவது குழந்தைக்கு சர்வேஸ்வரி என்றும் பெயர் சூட்டினேன். உனக்கு மணிமாலா என்று வைத்தேன். அதனாலேயே எங்களை விட்டு பாதியிலேயே அறுந்த மணி மாலை போல் உறவை அறுத்துக் கொண்டு சென்று விட்டாயே கண்ணே என கதறினார் முத்துவேல்....!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்