Lunch box recipe: தட்டபயறு சுரைக்காய் குழம்பு.. சூப்பர் டேஸ்ட்.. சுப்ரீம் சுவை.. சாப்ட்டுப் பாருங்க!
- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: தட்டப் பயறு சுரைக்காய் குழம்பு வச்சு சாப்பிட்டிருக்கீங்களா.. புளிக் குழம்பு வகைகளிலேயே இது தனி ரகமாக இருக்கும். சாப்பிட அவ்வளவு ஆசையாகவும் இருக்கும்.
வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
1. தட்ட பயறு - 1 கப் (கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்)
2.சுரைக்காய் - 1 கப் (நறுக்கியது)
3. காஷ்மீரி மிளகாய் அல்லது வரமிளகாய் - 3
4. சீரகம் - 1 ஸ்பூன்
5. பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
7. மல்லித்தூள் அல்லத குழம்பு மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
8. தக்காளி - 2
9. புளி - 1/2 நெல்லி சைஸ் (கரைத்து எடுத்துக் கொள்ளவும்)
10. தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
11. கறிவேப்பிலை, மல்லித்தழை - 1 கைப்பிடி
12. நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
13. கடுகு, உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
(உப்பு, காரம், புளிப்பு விருப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்ப)
செய்முறை :
1. ஊற வைத்த தட்ட பயிறுடன் 2 கப் தண்ணீர், சிறிது உப்பு, பெங்காயம் சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி சுரைக்காய் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், வர மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி ஆகியவை சேர்த்து மையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
4. பிறகு கடாயில் இருக்கும் சுரைக்காயுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிக்ஸியில் அரைத்த கலவை, கரைத்து வைத்த புளி கரைசல் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
5. பிறகு தட்ட பயிறை வேக வைத்த தண்ணீருடன், கொதிக்கும் குழம்புடன் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து குழம்பை கொதிக்க விட வேண்டும்.
6. தனியாக ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதோடு சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தட்டி போட்டு தாளிக்கவும்.
7. இந்த தாளிப்பை கொதிக்கும் குழம்பில் சேர்த்து, குழம்பு தேவையான பதத்திற்கு வந்த உடன் அடுப்பை அணைத்து பரிமாறினால் கம கம தட்ட பயிறு சுரைக்காய் குழம்பு ரெடி.
வடித்த சாதம் அல்லது குக்கர் சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு சூப்பர் காம்போ இந்த தட்டப் பயிறு சுரைக்காய் குழம்பு. வேலைக்கு செல்பவர்கள் காலையில் செய்து லஞ்ச் பேக் செய்து விட்டு, மீதி உள்ளதை நைட் டின்னருக்கும் பயன்படுத்திக் கொள்ள ஏற்ற குழம்பு இது.
தட்டப் பயிறு பயன்கள் :
1. தட்டப் பயிறி உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
2. சர்க்கரையின் அளவு சீராக வைக்க உதவுகிறது.
3. இதில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் ஏ,பி,சி, பாலிக் ஆசிட், இரும்புச் சத்து, சோடியம், பாஸ்பரஸ் போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
இதனை காராமணி என்றும் கூறுவார்கள். வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் இருக்கும் இந்த பயறு உடலுக்கு மிகவும் நன்மையும், ஆரோக்கியமும் தரக் கூடியதாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்