இது செம பிளான்.. "நரேந்திர மோடி"யைச் சுற்றி வந்து சாகசம் செய்யயப் போகும் "சூரிய கிரண்"!

Su.tha Arivalagan
Nov 17, 2023,06:49 PM IST

அகமதாபாத்: உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறவுள்ள அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.


நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் கிளைமேக்ஸ் நெருங்கி விட்டது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டி நவம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அகமதாபாத்தில் உள்ள பிரமாண்டமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.


கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வரை அமரக் கூடிய மிகப் பெரிய ஸ்டேடியம் இது. இந்த ஸ்டேடியத்தில் இந்தியா இறுதிப் போட்டியில் ஆடவுள்ளதால் ஒட்டுமொத்த தேசமும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தை நோக்கி திரும்பியிருக்கிறது. அகமதாபாத் ரசிகர்களோ பெரும் உற்சாகத்தில் உள்ளனர். அகமதாபாத் நகரமே திருவிழா உணர்வுடன் இருக்கிறது.




இறுதிப் போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் போட்டி குறித்த எதிர்பார்ப்பு பரபரப்பாகியுள்ளது. இந்த நிலையில் இன்னொரு விசேஷமும் அங்கு அரங்கேறவுள்ளது.


அதாவது போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ரசிகர்களை அண்ணாந்து பார்த்து அதிசயிக்க வைக்கப் போகிறார்கள்.. இந்திய விமானப்படையின் சூரியகிரண் விமான சாகசக் குழுவினர் வானில் சாகச நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 10 நிமிடம் வரை இந்த சாகச நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிகிறது.


வழக்கமாக சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்ற சமயங்களில்தான் இதுபோன்ற விமான சாசக நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்த முறை உலகக் கோப்பைப் போட்டித் தொடர் பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளதால், ரசிகர்களின் மகிழ்ச்சியுடன் தங்களையும் இணைத்துக் கொள்ள  விமானப்படை முடிவு செய்துள்ளது. அதன் விளைவுதான் சூரியகிரண் விமான சாகசம்.


போட்டி நடைபெறும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் மேலே வானில் சூரியகிரண் குழுவினர் சாகச நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். இந்தத் தகவல் ரசிகர்களுக்கு மேலும் திரில்லைக் கூட்டியுள்ளது. மேலும் என்னெல்லாம் சர்ப்பிரைஸ் காத்திருக்கிறதோ.. பொறுத்திருந்து பார்ப்போம்.