Surua Kumar Yadav: ஏன் தம்பி.. இப்ப இப்படிப் பொளக்குறீங்களே.. 19ம் தேதி ஏன் மிஸ் பண்ணீங்க??

Su.tha Arivalagan
Nov 24, 2023,12:22 PM IST

விசாகப்பட்டனம்: இந்தியா  - ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது பெரிதாக சோபிக்காத இந்திய அதிரடி வீரர் சூரிய குமார் யாதவ், நேற்று நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டியில் அதிரடியாக ஆடி இந்தியாவுக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.


இது இப்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. இப்போது இப்படி அடிக்கும் சூரியகுமார் யாதவ், நவம்பர் 19ம் தேதி நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஏன் இப்படி விளையாடவில்லை என்று பலர் கிண்டலாக கேட்டு வருகின்றனர்.


உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்த கையோடு தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் தொடங்கியுள்ளது.  இரு அணிகளிலும் ஸ்டார் வீரர்கள் பெரிதாக இடம் பெறவில்லை. இந்திய அணிக்கு சூரிய குமார் யாதவ் கேப்டனாக இருக்கிறார். 2ம் நிலை வீரர்கள்தான் அணி முழுக்க நிரம்பியுள்ளனர். ஆஸ்திரேலியா அணியிலும் அப்படித்தான்.




சூரிய குமார் அதிரடி ஆட்டம்


இந்த நிலையில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் சூரிய குமார் யாதவ் அதிரடி காட்டி ஆடினார்.  முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஜோஷ் இங்கிலீஷ் 110 ரன்களைக் குவித்து அதகளமாக்கினார். ஸ்டீவ் ஸ்மித் 52 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் பெரிதாக ஆடவில்லை. இதையடுத்து இந்தியா 209 ரன்கள் என்ற இலக்கை துரத்தியது.


ருத்துராஜ் கெய்க்வாட் டக் அவுட் ஆன நிலையில் இஷான் கிஷன் 58 ரன்கள் குவித்தார். யஸஷ்வி ஜெய்ஸ்வால் 21, ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 22 ரன்கள  எடுத்தனர். கேப்டன் சூரிய குமார் யாதவ் 42 பந்துகளில் 80 ரன்களைக் குவித்து அசத்தினார். கடைசி பந்து மிச்சமிருந்த நிலையில் இந்தியா 8 விக்கெட்களை இழந்து தனது வெற்றி இலக்கைத் தொட்டது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் 3 பேர் டக் அவுட் ஆனார்கள்.




போட்டி முடிவில் சூரிய குமார் யாதவ் பேசுகையில், இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. எப்பொழுதெல்லாம் கிரிக்கெட் விளையாடுகிறோமோஸ, அதிலும் இந்தியாவுக்காக விளையாடும்போது மிகப்பெரும் பெருமிதத்தை கொடுக்கிறது. அந்த வகையில் இந்த தருணத்தையும் நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன்.


அனுபவித்து விளையாடுவேன்


கேப்டன்சி என்ற சுமையை டிரஸ்ஸிங் ரூமோடு விட்டு விடுவேன். பேட்டிங் செய்யும்போது என்னுடைய கவனம் முழுவதும் நான் பேட் செய்வதில் மட்டுமே இருக்கும். நான் 10 ரன் எடுக்கிறேனோ அல்லது 40 ரன் எடுக்கிறேனோ.. அதை பற்றி கவலைப்பட மாட்டேன். ஆனால் என்னுடைய பேட்டிங்கை முழுமையாக அனுபவித்து செய்வேன்.


ரிங்கு சிங் மிக அருமையாக விளையாடினார். அவருடைய விளையாட்டு அட்டகாசமாக இருந்தது. கச்சிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் முகேஷ் குமார் வீசிய கடைசி ஓவர் ஆஸ்திரேலியாவை முடக்கி போட மிகவும் உதவியது. அவர் கடைசி ஓவரை யார்க்கராக போட்டது மிகுந்த பலன் கொடுத்தது. மிகப்பெரிய பங்களிப்பது. அனைவருமே நன்றாக விளையாடினார்கள். இந்திய அணியின் சிறப்பான பங்களிப்பு காரணமாகவே ஆஸ்திரேலியாவை நம்மால் வெல்ல முடிந்தது.


நம்முடைய பீல்டிங்கின்போது, 16 ஓவர்களுக்கு பிறகு நம்முடைய பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை நம் பக்கம் கொண்டு வந்து விட்டனர். இது பெரிய சாதனை. இந்த மைதானத்தில் 209 ரன்கள் சேஸ் செய்வது எளிதானது. எனவே எளிதாக எங்களால் வெல்ல முடிந்தது என்றார் சூரிய குமார் யாதவ்.