தொடர் மழை.. சுருளி அருவி,  வைகை அணையில் வெள்ளப் பெருக்கு.. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Meenakshi
Dec 18, 2023,06:54 PM IST

தேனி: வைகை ஆற்றிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால், மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை  மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


இந்த மாவட்டங்களில் நேற்றில் இருந்து  மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வைகை அணையில் இருந்தும் நீர் திறந்து விடப்படுவதால்  5 மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், குமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாலும் தற்போது தென் மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், மதுரை, தேனி, விருதுநகருக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 




தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சுருளி அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் யாரும் குளிக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதேபோல கும்பக்கரை நீர்வீழ்ச்சியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


நேற்றிலிருந்து மதுரை, தேனி மாவட்டங்களில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வைகை அனணயின் மொத்த கொள்ளளவு எட்ட உள்ள நிலையில், வைகையில் இருந்து தற்பொழுது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


வைகை அணைக்கு வினாடிக்கு 19280 கன நீர் வருகிறது. அணையில் இருந்து 3169 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4,754 அடியாக உள்ளது. அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருவதால்,  நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 10 மணிக்கு 25 ஆயிரம் கன அடி வரையிலும் மாலை மேலும் கூடுதலாக தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்


வைகை கரையோரம் உள்ள மக்கள் யாரும் ஆற்றில் இறங்கக்கூடாது என்றும், பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. வைகை ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தற்பொழுது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.