இந்தியாவின் அன்னை இந்திரா காந்தி.. பாராட்டிய சுரேஷ் கோபி.. கலகலத்த பிரஸ் மீட்.. லகலக பாஜக!
திருவனந்தபுரம்: முன்னாள் கேரள முதல்வர் கருணாகரன் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திய மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அங்கு வைத்து கருணாகரனையும், மறைந்த பிரதமர் இந்திரா காந்தியையும் புகழ்ந்து பேசியதால் பாஜகவினர் கோபமடைந்துள்ளனர்.
எப்படி காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்து சுரேஷ் கோபி பேசலாம் என்று அவர்கள் சமூக வலைதளங்களில் சுரேஷ் கோபிக்கு எதிராக பாஜகவினர் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் தனது கருத்து யாரையும் அவமரியாதை செய்யாது என்று சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சராக சுரேஷ் கோபி நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் கேரளா வந்த அவர் நேற்று பூங்குன்னத்தில் உள்ள மறைந்த முன்னாள் கேரள முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கருணாகரன் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியார்களிடம் பேசியபோது சில கருத்துக்களை வெளியிட்டார்.
அதாவது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, இந்தியாவின் அன்னை என்று அவர் வர்ணித்தார். கருணாகரனை தீரமிக்க நிர்வாகி என்று புகழ்ந்து பேசினார். இன்னொரு மறைந்த கம்யூனிஸ்ட் தலைவரான முன்னாள் கேரள முதல்வர் இ.கே.நாயனாரை தனது அரசியல் குரு என்றும் அவர் வர்ணித்தார்.
மேலும் அவர் கூறுகையில் இவர்கள் எல்லாம் எனது அரசியல் குருக்கள். இதற்கு அரசியல் கற்பிக்கக் கூடாது. குறிப்பாக ஊடகத்தினர் இதை அரசியலாக்க வேண்டாம். இந்திரா காந்தியை சாதாரண தலைவராக பார்க்க முடியாது. அவர் இந்தியாவின் அன்னை ஆவார். அதேபோல கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தந்தையாக விளங்கியவர் கருணாகரன். இப்படி நான் சொல்வதனால் மற்ற தலைவர்களை அவமதிப்பதாக ஆகாது. மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கியவர் கருணாகரன்.
நான் 2019ம் ஆண்டே இங்கு வர விரும்பினேன். ஆனால் பத்மஜதான் (கருணாகரன் மகள், இப்போது பாஜகவில் இருக்கிறார்) தடுத்து விட்டார் என்றார் சுரேஷ் கோபி.
விசேஷம் என்னவென்றால் திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் கருணாகரன் மகன் முரளிதரன்தான் போட்டியிட்டார். இதில் அவர் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு படு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சுரேஷ் கோபி காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்து பேசியது பாஜகவினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது. பலரும் அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.