மோடி பெயரை பயன்படுத்திய வழக்கு.. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
Mar 23, 2023,11:11 AM IST
சூரத்: மோடி என்ற பெயரை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது கூறிய வார்த்தைகளுக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என்று சூரத் கோர்ட் தீர்ப்பளித்து அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது கர்நாடகத்தின் கோலார் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது திருடர்களாக இருக்கும் எல்லோருக்குமே மோடி என்ற துணைப் பெயர் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாக கூறியிருந்தார்.
இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான பூர்னேஷ் மோடி என்பவர் சூரத் கோர்ட்டில் ராகுல் காந்தி மீது கிரிமினல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எச்.எச். வர்மா கடந்த வாரம் இறுதி வாதங்களை கேட்டு தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தார். இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் ராகுல் காந்தி குற்றவாளி என்று அவர் தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையையும் நீதிபதி அறிவித்தார். தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வதற்கு வசதியாக ஜாமீனும் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல் காந்தி சார்பில் வாதாடிய வழக்கறிஞர், உண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை மனதில் வைத்துத்தான் ராகுல் காந்தி பேசியிருந்தார். வழக்குத் தொடருவதாக இருந்தால் அவர்தான் தொடர்ந்திருக்க வேண்டும். பூர்னேஷ் மோடிக்கு வழக்கு தொடர முகாந்திரம் இல்லை என்று வாதிட்டிருந்தார்.
முன்னதாக பூர்னேஷ் மோடி தாக்கல் செய்திருந்த வழக்கில், ராகுல் காந்தி தனது பேச்சின் மூலம் மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தி விட்டார் என்று கூறியிருந்தார். பூர்னேஷ் மோடி, பூபேந்திர படேல் அரசில் அமைச்சராக இருந்தவர். சூரத் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
.