காங். வேட்பு மனு நிராகரிப்பு.. டம்மி வேட்புமனுவும் டிஸ்மிஸ்.. சுயேச்சைகளும் வாபஸ்.. பாஜக வெற்றி!!

Su.tha Arivalagan
Apr 22, 2024,06:42 PM IST

சூரத்: நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலம் சூரத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் முகேஷ் தலால் என்பவர் போட்டியின்றி தேர்வாகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட மனு செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளர், அவரது டம்மி வேட்பாளர் ஆகியோரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 8 சுயேச்சைகளும் ஒட்டுமொத்தமாக தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றதால் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்.


பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்கையில், காங்கிரஸுக்கு எதிராக குறுக்கு வழியில் வெற்றியைப் பெற்றுள்ளது பாஜக. காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கையெழுத்திட்டிருந்தவர்களை கடத்திக் கொண்டு போய் விட்டது பாஜக. இந்த வெற்றி சத்தியத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளது.




சூரத் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் நிலேஷ் கும்பானி என்பவர் வேட்பு மனு செய்திருந்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக சுரேஷ் பட்சாலா என்பவர் மனு செய்திருந்தார். மேலும் 8 சுயேச்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் ஆகியோர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களில் இடம் பெற்றிருந்த கையெழுத்துக்கள் சரியாக இல்லை என்று கூறி அவற்றை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். 


இந்த நிலையில் திடீரென 8 சுயேச்சை வேட்பாளர்களும் ஒட்டுமொத்தமாக மனுக்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனால் பாஜக வேட்பாளர் மட்டும் தற்போது களத்தில் உள்ளார். இதனால் அவர் போட்டியின்றி தேர்வாகிறார்.


சூரத் எம்.பியாக போட்டியின்றி தேர்வாகும் தலால், சூரத் மாநகராட்சியில்  நிலைக்குழு  தலைவராக இருந்தவர். தற்போது சூரத் நகர பாஜக பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். 


சூரத்தில் பாஜக வெற்றி பெற்ற விதத்திற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறுக்கு வழியில் வந்த வெற்றி என்று அது வர்ணித்துள்ளது.