மாஜி அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை.. மீண்டும் எம்.எல்.ஏ. பதவி?

Su.tha Arivalagan
Mar 11, 2024,07:20 PM IST

டெல்லி: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் சிறைத் தண்டனை கொடுத்து அளித்த தீர்ப்பை  நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


கடந்த  2006ம் ஆண்டு முதல் 2011 வரை மறைந்த கருணாநிதி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் பொன்முடி. அப்போது வருமானத்திற்கு மீறிய வகையில் ரூ. 1.75 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக கூறி கடந்த அதிமுக ஆட்சியில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து பொன்முடி உள்ளிட்ட 3 பேரையும் கோர்ட் விடுதலை செய்தது. இதை எதிர்த்து 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அப்பீல்  செய்தது.  அந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.


இந்த மேல் முறையீட்டு வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி காணொளி மூலம் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது பொன்முடி, விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடியின் அமைச்சர் பதவியும், எம்எல்ஏ பதவியும் பறி போனது. 




இந்த நிலையில் தனக்கு எதிரான தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி தரப்பு அப்பீல் செய்தது. அந்த அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீ்ம் கோர்ட், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை  நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால் பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


சமீபத்தில்தான் பொன்முடியால் காலியான திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு, சட்டசபை செயலகம் கடிதம் அனுப்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.