2 மாநிலங்களில்தான் முறைகேடு.. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

Meenakshi
Aug 02, 2024,02:53 PM IST

டெல்லி:   நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக கூறி விட்டது.


இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகளும் ஜூன் 4ம் தேதி வெளியானது. நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கியது, வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறை கேடுகள் நடந்ததாக கூறப்பட்டது.


இதனால், நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள், பெற்றோர்கள்  என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.




இந்நிலையில்,மாணவர்களும், பெற்றோர்களும் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதி மன்றம் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். நீதிபதிகள்  கூறுகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு பரவலாகவும் திட்டமிட்ட ரீதியிலும் நடைபெறவில்லை. இதனால் தேர்வின் புனித தன்மை கெட்டுவிட்டதாக கூற முடியாது. எனவே இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது. அதே நேரத்தில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால் தான் முன் எப்போதும் இல்லாத வகையில் 44 மாணவர்கள் முழுமதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள்.


எனவே அடுத்த ஆண்டு இதுபோன்ற மோசமான முறையில் தேர்வு நடத்தப்படுவதை தவிர்க்க தேசிய தேர்வு முகமையும், மத்திய அரசும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு தனது அறிக்கையை செப்டம்பர் 30ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 


நவீன தொழில் நுட்பங்களின் அடிப்படையில் தேர்வு முறையை வலுப்படுத்தி நிலையான இயக்கம் நடைமுறைகளை உருவாக்குவது குறித்து ராதாகிருஷ்ணன் குழு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.