நியூஸ்கிளிக் எடிட்டர் பிரபிர் புர்கயஸ்தா கைது சட்டவிரோதமானது.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Su.tha Arivalagan
May 15, 2024,11:50 AM IST

டெல்லி:  நியூஸ்கிளிக் ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா  கைது சட்டவிரோதமானது, என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்யவும் அது உத்தரவிட்டுள்ளது.


டெல்லி போலீஸாா் இவரை தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தனர். அந்தக் கைதைத்தான் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. 


தன்னைக் கைது செய்ததை எதிர்த்து பிரபிர் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. அப்போது,  கைது செய்யப்பட்டது தொடர்பான நகலை அரசுத் தரப்பு தாக்கல் செய்யவில்லை. இதன் மூலம் அவரது கைது சட்டவிரோதமானது என்று வருகிறது.  இந்த கைது சட்டவிரோதமாக நடந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. அவரை சிறையில் அடைத்த உத்தரவும் செல்லாது என்று கோர்ட் உத்தரவிடுகிறது. பிரபிர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.




கடந்த மார்ச் மாதம் பங்கஜ் பன்சால் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒருவரைக் கைது செய்தால், அவரைக்  கைது செய்வது தொடர்பான உத்தரவை கைது செய்யப்பட்டவருக்கு எழுத்து பூர்வமாக அளிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்தக் கைது செல்லாது என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம். அதே காரணத்தையே இந்த வழக்கிலும் சொல்லி உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீவிரவாத தடுப்பு மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் பிரபிர். சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக நியூஸ்கிளிக் நிறுவனம் பணம் பெற்றதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து பிரபிரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.


இந்த வழக்கில் நியூஸ்கிளிக் நிறுவனத்தின் எச்ஆர் அதிகாரி அமித் சக்கவர்த்தி மீதும் குற்றம் சாட்டப்பட்டது.  பின்னர் இந்த வழக்கில் அமித் அப்ரூவர் ஆகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.