ராம்தேவ் மன்னிப்பை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்.. மத்திய அரசு, உத்தரகாண்ட் அரசுக்கும் எச்சரிக்கை

Su.tha Arivalagan
Apr 10, 2024,05:54 PM IST

டெல்லி: பதஞ்சலி நிறுவனம் உச்சநீதிமன்ற உத்தரவுகளை காலில் போட்டு மிதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக மீண்டும் யோகா ராம்தேவ் மன்னிப்பு கேட்ட நிலையில் அதை முற்றிலும் நிராகரிப்பதாகவும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த வழக்கில் மத்திய அரசு, உத்தரகாண்ட் மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


ராம்தேவ், பாலகிருஷ்ணா ஆகியோரை நிறுவனர்களாகக் கொண்ட பதஞ்சலி நிறுவனம் பல்வேறு  ஆயுர்வேத பொருட்களை தயாரித்து விற்று வருகிறது. இதுதொடர்பாக அது செய்துள்ள விளம்பரங்கள் பெரும் சர்ச்சையை எழுப்பின. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த நிலையில், அவற்றை பதஞ்சலி நிறுவனம் காற்றில் பறக்கவிட்டது, கண்டு கொள்ளவில்லை. 




இதையடுத்து ராம்தேவ் கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து பகிரங்க மன்னிப்பு கேட்டார் ராம்தேவ். ஆனால் அந்த மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் நிராகரித்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் மன்னிப்பு கேட்டு ராம்தேவ் தரப்பில்  மனு செய்யப்பட்டது. தற்போது அதையும் உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.


இன்று உச்சநீதின்றம் இதுகுறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டது. நீதிபதிகள் ஹிமா கோலி, அமானுல்லா ஆகியோர் கூறுகையில், நாங்கள் கண்ணை மூடிக் கொண்டிருக்க பார்வையற்றவர்கள் இல்லை. இந்த வழக்கில் நாங்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்ள விரும்பவில்லை. உத்தரகாண்ட் அரசு, பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக கொஞ்சம் கூட செயல்படவில்லை. மத்திய அரசும் திருப்திகரமான பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை.  ராம்தேவின் மன்னிப்பு என்பது ஒப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் நிராகரிக்கிறோம்.  கொடுத்த உறுதிமொழியை வேண்டும் என்றே அவர்கள் மீறியுள்ளனர்.


முதலில் இந்த மன்னிப்பை அவர்கள் மீடியாவுக்கு அனுப்பியுள்ளனர். கோர்ட்டுக்கு அனுப்பவில்லை. வெற்று விளம்பரமே அவர்களது நோக்கமாக இருந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று நீதிபதிகள் கோபமாக கூறினர்.