அரசியலையும் மதத்தையும் பிரித்தால் .. வெறுப்பு பேச்சு குறையும்.. சுப்ரீம் கோர்ட்
Mar 30, 2023,12:41 PM IST
டெல்லி: நாட்டில் வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல்வாதிகள், மதத்தை அரசியலில் கலக்காமல் அதைக் கைவிட்டால்தான், வெறுப்பு பேச்சுக்களும் ஒழியும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
பல்வேறு மாநில அரசுகள் அவதூறு வழக்குகள் குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவை நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்தினா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டது.
நீதிபதி கே.எம்.ஜோசப் கூறுகையில், ஜவஹர்லால் நேருவும், அடல் பிஹாரி வாஜ்பாயும் பேசினால், அதைக் கேட்பதற்கு மக்கள் அலைகடலென திரண்டார்கள். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அவர்களது பேச்சுக்கள் சென்றடைந்தன.
எப்போது பிரச்சினை வருகிறது என்றால் மதத்துடன், அரசியலைக் கலக்கும்போதுதான். இந்த வேலையை செய்வது அரசியல்வாதிகள்தான். மதத்தையும், அரசியலையும் பிரித்து வைக்க வேண்டும். அதை செய்யும்போதுதான் இந்த வெறுப்பு பேச்சுக்களும் ஒழியும். இதை அரசியல்வாதிகள்தான் செய்தாக வேண்டும். அரசியலுடன் மதத்தைக் கலப்பது ஜனநாயகத்திற்குப் பேராபத்தாகும்.
எத்தனை நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத்தான் போடுவது.. யாரையும் நாங்கள் அவதூறாகப் பேச மாட்டோம். வெறுப்பு பேச்சை வெளியிட மாட்டோம். யாரையும் இழிவுபடுத்த மாட்டோம் என்று இந்த நாட்டு மக்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பு அடுத்த தரப்பை இழிவுபடுத்தும், கேவலப்படுத்தியும் பேசிக் கொண்டேதான் இருக்கிறது. டிவியிலும், சமூக வலைதளங்களிலும் இதைத்தான் பார்க்கிறோம்.