டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை ஜாமீன்.. உச்சநீதிமன்றம் அதிரடி

Su.tha Arivalagan
May 10, 2024,05:23 PM IST

டெல்லி: அமலாக்கத்துறையின் கடும் ஆட்சேபனைகளை நிராகரித்து விட்ட சுப்ரீம் கோர்ட், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளித்து  அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜூன் 1ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.


ஜூன் 1ம் தேதியுடன் மக்களவைத் தேர்தல் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறையினரால், மது கொள்கை ஊழல் வழக்கில் மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார் கெஜ்ரிவால். கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மனு செய்யவில்லை. மாறாக தனது கைதே சட்டவிரோதமானது, எனவே தன் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி டெல்லி ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அங்கு மனு தள்ளுபடியாகவே, உச்சநீதிமன்றத்தை அணுகினார்.




அவரது மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரித்தபோது காரசாரமான விவாதம் நடந்தது. இந்த விசாரணையின்போது அமலாக்கத்துறையிடம் சரமாரியான கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. இந்த நிலையில் இன்று கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது. ஜூன் 2ம் தேதி கெஜ்ரிவால் திஹார் சிறையில் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் முக்கிய அம்சங்கள்:


- ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங்குக்கு விதிக்கப்பட்டுள்ள ஜாமீன் நிபந்தனைகள் அனைத்தும் கெஜ்ரிவாலுக்கும் பொருந்தும். (6 மாத சிறை வாசத்திற்குப் பின்னர் ஜாமீனில் விடுதலையானவர் ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங்).


- அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அதற்குத் தடை இல்லை. தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடலாம்.


முன்னதாக ஜூன் 4ம் தேதி வரை ஜாமீன் கோரியிருந்தது கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் தரப்பு. ஆனால் 1ம் தேதி வரை மட்டுமே ஜாமீன் தரப்படுவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.


கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் தரக் கூடாது, அவர் பிரச்சாரம் செய்யக் கூடாது, அவர் பிரச்சாரம் செய்யாவிட்டால் எதுவும் பாதிக்கப்படாது என்று அமலாக்கத்துறை கடுமையான ஆட்சேபத்தை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் அத்தனை ஆட்சேபனைகளையும் உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. 


ஜாமீன் கிடைத்திருப்பதால் விரைவில் பிரச்சாரக் களத்தில் கெஜ்ரிவால் குதிக்கவுள்ளார். அவரது பிரச்சாரம் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியைத் தரும், வட மாநிலங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்க்கின்றன.