Electoral bonds: SBI கேட்டது 3 மாச டைம்.. ஆனால் சுப்ரீம் கோர்ட் கொடுத்தது.. ஜஸ்ட் 24 மணி நேரம்!

Su.tha Arivalagan
Mar 11, 2024,06:13 PM IST

டெல்லி: தேர்தல் பத்திர வழக்கில் முழு விவரத்தையும் வெளியிட 3 மாத அவகாசம் கேட்ட இந்திய ஸ்டேட் வங்கியின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. அதற்குப் பதில் நாளை மாலைக்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கவும், தேர்தல் ஆணையம் அதை மார்ச் 15ம் தேதிக்குள் தனது இணையதளத்தில் பிரசுரிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தேர்தல் பத்திர வழக்கில் பிப்ரவரி 15ம் தேதி அதிரடியான ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி யாரெல்லாம் தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள், எவ்வளவு தொகை வந்தது என்பது உள்ளிட்ட விவரங்களை மார்ச் 13ம் தேதிக்குள் பகிரங்கமாக அறிவிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் டேட்டாவை சேகரித்து வெளியிட கால அவகாசம் தேவை என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. மனு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டேட் வங்கி கால அவகாசம் கேட்பது நியாயமற்றது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.




இந்த நிலையில் இன்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், ஸ்டேட் வங்கியின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். அப்போது நீதிபதிகள் கடுமையான பல கேள்விகளை சரமாரியாக கேட்டனர். நாங்கள் உத்தரவிட்ட பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.. இத்தனை நாட்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன், யாரெல்லாம் கொடுத்தார்கள் எத்தனை கொடுத்தார்கள் என்பதைத்தானே கேட்கிறோம்.. அதை ஏன் சொல்ல முடியாது. ரகசிய உறை யில் விவரங்கள் உள்ளது என்றால் அதைப் பிரித்துப் பார்க்க எவ்வளவு நேரம் ஆகப் போகிறது.. உங்களிடமிருந்து நாங்கள் கொஞ்சமாவது நேர்மையை எதிர்பார்க்கிறோம் என்று நீதிபதிகள் கடுமையாக கூறினர்.


இறுதியில் ஸ்டேட் வங்கியின் கோரிக்கையை நிராகரித்த பெஞ்ச், நாளை மாலைக்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர். தேர்தல் ஆணையம் இந்த விவரங்களை மார்ச் 15ம் தேதிக்குள் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


நாளைக்குள் ஸ்டேட் வங்கி விவரங்களை வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுப்ரீம் கோர்ட் கடுமையாக எச்சரித்துள்ளது.