ஆளுக்கு ஒரு பக்கம் வேலைக்குப் போறீங்க.. சேர்ந்து வாழ முயற்சிக்கலாமே.. தம்பதிக்கு கோர்ட் அட்வைஸ்!

Su.tha Arivalagan
Apr 24, 2023,09:51 AM IST
டெல்லி:  விவாகரத்து கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த பெங்களூர் தம்பதிக்கு நீதிபதிகள் பரிவான அறிவுரை கூறி, முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும் தம்பதிகள் பிடிவாதமாக இருந்ததால் விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

பெங்களூரில் பணியாற்றி வரும் சாப்ட்வேர் என்ஜீனியர்களாக பணியாற்றி வரும் தம்பதி விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு ஹைகோர்ட் வரை வந்தும் அதில் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து  இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தது. 



அங்கு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வழக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தம்பதிக்கு சில அறிவுரைகளை வழங்கினர். நீதிபதிகள் கூறுகையில், உங்களது வாழ்க்கையில் திருமணத்திற்கென்று நீங்கள் நேரமே ஒதுக்கவில்லை. இருவருமே பெங்களூரில்தான் பணியாற்றுகிறீர்கள். ஒருவர் பகலில் வேலைக்குப் போய் விடுகிறார்.. இன்னொருவர் இரவில் வேலைக்குப் போகிறார்.

விவாகரத்து பெற உங்களுக்கு வருத்தமில்லை. ஆனால் கல்யாணம் செய்து கொண்டதற்காக வருத்தப்படுகிறீர்கள். உண்மையில் நீங்கள் வாழவே இல்லை. ஏன் மீண்டும் இணைந்து வாழ்வது குறித்து நீங்கள் சிந்திக்கக் கூடாது. பெங்களூரில் விவாகரத்து செய்வோர் குறைவு. நீங்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வது குறித்து பரிசீலிக்கலாமே என்று அறிவுரை கூறினர்.

ஆனால் இருவருமே சேர்ந்து வாழ முடியாது என்பதில் தீர்மானமாக உள்ளதாக தெரிவித்த அவர்களது வழக்கறிஞர்கள், இருவரும் உறுதியாக இருந்ததால்தான் வழக்கு இங்கு வந்திருப்பதையும் சுட்டிக் காட்டினர். மேலும் கணவர் தனக்கு மொத்தமாக ரூ. 12.51 லட்சம் தந்து செட்டில் செய்து விட வேண்டும். அப்படிச் செய்தால் முழு மனதுடன் விவாகரத்து தர தயாராக இருப்பதாக மனைவி தெரிவித்துள்ளதாகவும் வழக்கறிஞர்கள் கோர்ட்டில் தெரிவித்தனர்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தனர்.