சென்னையை ரொம்பத்தான் டிரோல் பண்றாங்க.. அதை விட மோசமான நிலையில் இந்த டீம் இருக்கே!
சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பார்க்கவே பரிதாபமாகத்தான் உள்ளது. இருப்பினும் சென்னை அணிக்கு ஆறுதல் ஒரு விஷயம் என்னவென்றால் அதற்கும் கீழே ஒரு அணி மோசமான நிலையில் உள்ளது. அதை எல்லோரும் வசதியாக மறந்து விட்டார்கள்.
ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியை அது வீழ்த்தியிருந்தது. அதன் பிறகு நடந்த நான்கு போட்டிகளில் அது தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. இதுவரை இப்படி ஒரு தோல்வியை தொடர் தோல்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்ததில்லை. இந்த நிலையில் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடியாக விளையாடி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
காரணம் அதற்கு முந்தைய போட்டிகளில் சென்னை அணி சேசிங்தான் செய்திருந்தது. ஆனால் நேற்று முதல் முறையாக, முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது. ஆனால் இப்பொழுதும் கடும் ஏமாற்றத்தையே கொடுத்து விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தத் தொடரில் சென்னை அணி சந்தித்து வரும் தொடர் தோல்விகளால் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
ஆனால் சென்னையை மட்டும் கடுமையாக விமர்சனம் செய்து வருவதில் உள்நோக்கம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காரணம், சென்னையை விட மோசமான நிலையில் இன்னொரு அணி உள்ளது. ஆனால் அந்த அணி குறித்த எந்த விமர்சனமும் எழவில்லை. யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை.
இந்தத் தொடரில் சன்ரைசர் ஹைதராபாத் அணியும் மோசமான நிலையில்தான் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி நான்கில் தோல்வியை தழுவியுள்ளது. ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் -1.62 ஆகும். இரண்டு புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில், அதாவது கடைசி இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை அது ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் தோல்வியுற்று ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று ரெண்டு புள்ளிகளுடன் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி -1.54 என்ற ரன் ரேட்டில் உள்ளது. இது ஹைதராபாத் அணியை விட சற்று பரவாயில்லைதான். இதனால் தான் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி கடைசி இடத்திற்கு இன்னும் போகாமல் உள்ளது.
அடுத்து வரும் போட்டிகளில் சென்னை அணி கட்டாயம் வென்றாக வேண்டும். அப்பொழுதுதான் பிளே ஆப் சுற்று பற்றி கனவு காண முடியும். புள்ளிகள் பட்டியலை பொருத்தவரை குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.