9 மாதம் தவிப்புக்குப் பிறகு இன்று புறப்படுகிறார் சுனிதா வில்லியம்ஸ்.. நாளை அதிகாலை பூமியை அடைவார்!
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதமாக தவித்து வந்த அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் ஆகிய இருவரும் இன்று பூமிக்குப் புறப்படுகின்றனர். இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3 மணி அளவில் இருவரும் பூமியை வந்தடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வந்தடைந்தனர். ஆரம்பத்தில் 8 நாட்கள் மட்டும்தான் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டு கடைசியில் 9 மாதங்கள் வரை அங்கு இருக்க நேரிட்டு விட்டது. இதனால் அவர்கள் இருவரும் எப்போது திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு வலுத்துக் கொண்டே போனது.
இந்த நிலையில்தான் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்து அதனுடன் இணைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது டிராகன் விண்கலத்திற்கு சுனிதாவும், வில்மோரும் மாறி விட்டனர். இதைத் தொடர்ந்து டிராகன் விண்கலம் இன்று பூமிக்குப் புறப்படவுள்ளது. இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு மேல் டிராகன் புறப்படும். இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3 மணிக்கு மேல் பூமியை வந்தடையும் டிராகன். டிராகன் விண்கலத்தில் சுனிதா, வில்மோர் தவிர மேலும் 2 பேரும் (நிக் ஹேக், அலெக்சான்டர் கோர்புனோவ்) இடம் பெறுகிறார்கள்.
கடந்த 9 மாதமாக விண்வெளி நிலையத்தில் இருந்தபோது சுனிதாவும், வில்மோரும் பல்வேறு வகையான அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். பல்வேறு ஆய்வுப் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் அவர்களது நேரமும் வீணாகவில்லை. விண்வெளி நிலைய ஆய்வுப் பணிகளுக்கும் பேருதவியாக இருந்தனர். தாங்கள் சிறந்த மனோ திடத்துடன் இருப்பதாகவும் இருவரும் அவ்வப்போது தெரிவித்து வந்தனர்.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.27 மணியளவில் நான்கு விண்வெளி வீரர்களுடன் கூடிய டிராகன் விண்கலம் புளோரிடா கடல் பகுதியை வந்தடையும். மொத்தம் 17 மணி நேரம் டிராகன் விண்கலம் பயணிக்கவுள்ளது.
9 மாதங்கள் விண்வெளியில் இருந்து விட்டு பூமிக்குத் திரும்புவதால் சுனிதாவுக்கும், வில்மோருக்கும் உடல் ரீதியாக பல்வேறு சவால்கள் காத்துள்ளன. இதை கருத்தில் கொண்டு இருவருக்கும் தேவையான பல்வேறு முன்னேற்பாடுகளை நாசா செய்துள்ளது. மொத்த உலகமும் சுனிதா, வில்மோர் மறு வருகைக்காக காத்திருக்கிறது.
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நாசா ஏற்பாடு செய்துள்ளது.