சுண்டைக்காய் பயலே.. அப்படீன்னு யாரையும் கேலி பண்ணிராதீங்கப்பு.. சுண்டைக்காய் செம மாஸ் தெரியுமா?

Su.tha Arivalagan
Apr 15, 2024,05:55 PM IST

- பொன் லட்சுமி


சுண்டைக்காய்.. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னு ஒரு பழமொழி இருக்கு இல்லியா.. அதுக்கு பொருத்தமானது இந்த சுண்டைக்காய்தான். அளவுல சின்னதா இருந்தாலும், நம்மளோட உடம்பு ஹெல்த்தியா இருக்க இது பண்ற வேலை இருக்கே.. ஆத்தாடி.. பெரிய லிஸ்ட்டே போடலாம் பாஸ் அதை.!


உடம்புக்கு நல்லது செய்றதுல முக்கியமான காய் தான் நம்ம சுண்டைக்காய்... நம்மாளுங்க பலரும் சொல்வாங்க, அவன் கிடக்கான் சுண்டைக்காய் பையன்னு..  அதாவது அத்தனை ஏளனமான கிண்டல் அது. ஆனால் மூர்த்தி பெரிதல்ல, கீர்த்திதான் பெரிது என்பதற்கு ஏற்ப சுண்டைக்காய்க்குள் ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் ஒளிஞ்சிருக்குங்க.


சுண்டைக்காய் வாயில் போட்டா கசக்கும்தான்.. உண்மைதான்.. ஆனா அந்த கசப்புல தான்  நம்ப முடியாத அளவிற்கு  பல நன்மைகள் ஒளிஞ்சிட்டு இருக்கு.  அதைப் பார்க்கலாம் வாங்க.


பொதுவாக இந்த செடியில் இரண்டு வகை இருக்கிறது, ஒன்று  நாட்டுச் சுண்டை.. இது  பெரும்பாலான வீடுகளில் வளர்க்கிறார்கள்.. இதில் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும், காய் குறைந்த கசப்பு தன்மையுடன் இருக்கும்... இதை பச்சையாக குழம்பு வைத்தால் அவ்வளவு ருசியாக இருக்கும்.. மற்றொன்று காட்டில் வளரக்கூடிய காட்டு சுண்டை..  இது  கிராமப்புறங்களில் ரோட்டோரத்திலும் தோட்டங்களின் வேலி ஓரத்திலும் இயற்கையாக  வளரக்கூடியது. இதில் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும்.. பச்சையாக குழம்பு வைக்கும் பொழுது  கொஞ்சம் கசப்பு தன்மையுடன் இருக்கும்.




சித்த மருத்துவத்தில் கூட சுண்டைக்காய்க்கு என்று தனி இடம் இருக்கிறதாம்.. ஏன்னா  இந்தச் செடியின் இலை முதல் பூ காய் வேர் என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது தான்..


பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை சரியாக சுண்டைக்காய் பெஸ்ட் உணவு. கர்பப் பையில் வரும் நீர்க்கட்டி மற்றும் தைராய்டு போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை சரி செய்ய சுண்டைக்காய் கை கொடுக்கும் தெய்வம் போல உள்ளது. 


அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் உடம்பு சூட்டையும் குறைக்கும்.. மேலும் இது காய்ச்சலை குணப்படுத்தவும் வல்லது.  சுண்டைக்காய் பொடியுடன்  சீரகம்  மிளகு உப்பு சேர்த்து பொடி செய்து சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் காய்ச்சல் குணமாகுமாம். இதெல்லாம் அந்தக் காலத்து பாட்டி வைத்தியமாக இருந்தாலும், உடம்புக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் இப்போதும் கூட தாராளமாக சாப்பிடலாம்.


சைனஸ் ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளவர்கள்  அடிக்கடி உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் சரியாகும் என்றும் சொல்லப்படுகிறது.. இதனை வத்தலாக செய்து சாப்பிடுவதை விட பச்சையாக குழம்பு வைத்து  சாப்பிடுவது தான் நல்லது. சுண்டைக்காயில் உள்ள ஆண்டி  ஆக்சிடென்ட்கள்  இன்சுலின் உற்பத்தியையும், குளுக்கோஸ் உறிஞ்சுதலையும் கட்டுப்படுத்தி ரத்த சர்க்கரை  அளவை ஏறவிடாமல் தடுக்கிறது.


மூல நோயால் ஏற்படும் ரத்தக் கசிவுக்கு  பச்சை சுண்டைக்காய் மிகப் பெரும் அருமருந்து... பச்சை சுண்டை காயை நெய்யில் வதக்கி  சாப்பிட்டு வரும்போது மூலநோய் கட்டுப்படுத்தப்படும்.. அது மட்டுமல்லாமல்  செரிமான பிரச்சனைகளுக்கும் வயிற்றில் உள்ள கிருமிகளை வெளியேற்றவும்  வயிற்று வலி உப்புசம் போன்ற நோய்களும் சரியாகும்.


குழந்தைகள் அதிகமாக இனிப்பை சாப்பிடுவதால் வயிற்றில் கிருமிகள் தங்கிவிடும்.  அதை வெளியேற்ற   சுண்டைக்காய்  கறிவேப்பிலை மிளகு மூன்றையும் சேர்த்து கசாயம் வைத்து  அடிக்கடி  கொடுக்கும் போது  வயிற்றில் பூச்சிகளால் ஏற்படும் வயிற்று வலி, மலச்சிக்கல் எதுவும் ஏற்படாது.. மேலும் அவர்களின் எலும்பும் பலப்படும்.




இவ்வளவு நன்மைகள் வாய்ந்த இந்த சுண்டைக்காயைத்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் ஒதுக்கி வைக்கிறார்கள்... உடம்பில் சிறு பிரச்சினை என்றால் கூட உடனே மருத்துவமனையில் தேடி செல்கிறார்கள் ஆனால் இயற்கையாக செலவே இல்லாமல்  கிடைக்கக்கூடிய  இந்த மாதிரியான காய்களை அதிகமாக உபயோகப்படுத்துவதில்லை.


இனிமேலாவது தொட்டதற்கெல்லாம் மருத்துவமனை செல்லாமல் இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த மாதிரி உணவுப் பொருட்களை பயன்படுத்துங்கள்  ஆரோக்கியமாக வாழுங்கள்.