சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், மதுரை கிளைக்கும்.. நாளை முதல் கோடை விடுமுறை!
சென்னை: சென்னை உயர்நீதி மன்றத்துக்கு நாளை முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகளை திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் விடுமுறையில் இருக்கும்.
நாடு முழுவதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இவற்றில் இருந்து தப்பிக்கும் பொருட்டு பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த வெப்பத்தினால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஏப்ரல் மே மாதங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு விட்டது. இ்த நிலையில் தற்போது கோர்ட்டுகளுக்கும் விடுமுறை தொடங்கவுள்ளது. 2024ம் ஆண்டிற்கான கோடை விடுமுறை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மே 1ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விடுமுறைக்காலங்களில் அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை என இரு உயர் நீதிமன்றங்களுக்கும் விடுமுறை கால நீதிபதிகள், நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.