ராஜ்யசபா நியமன எம்.பியானார் சுதா மூர்த்தி..  குடியரசுத் தலைவர் உத்தரவு.. பிரதமர் மோடி வாழ்த்து

Su.tha Arivalagan
Mar 08, 2024,09:53 PM IST

டெல்லி: இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தியின் மனைவியும், எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சுதா மூர்த்தி, ராஜ்யசபா நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.


சுதா மூர்த்தியின் நியமனம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், சுதா மூர்த்தியை ராஜ்யசபா உறுப்பினராக நியமித்து, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருப்பது குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். சமூக சேவை, தானங்கள், கல்வி ஆகியவற்றில் தனது மிகுந்த பங்களிப்பை செலுத்தியவர் சுதாமூர்த்தி. அவரது செயல்கள் அனைத்தும் அனைவருக்கும் மிகச் சிறந்த முன்னுதாரணங்கள் ஆகும்.  இப்படிப்பட்ட பெண் சக்தி, ராஜ்யசபா உறுப்பினராகியிருப்பது மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது. மிகச் சிறந்த நாடாளுமன்ற அனுபவம் அவருக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.




முன்னதாக, கலைத்துறை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை ஆகிய துறைகளில் 12 பேரை ராஜ்யசபாவுக்கு நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர்.


சுதாமூர்த்தியின் கணவர் நாராயணமூர்த்திதான் இன்போசிஸ் ஐடி நிறுவனத்தை நிறுவியவர். அவரது மருமகன்தான் இங்கிலாந்து பிரதமராக இருக்கும் ரிஷி சுனாக் என்பது குறிப்பிடத்தக்கது.


சுதா மூர்த்தி மிகவும் சிம்பிளானவர். ஒரு என்ஜீனியராக டெல்கோ நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கியவர். அதுதான் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமாக உள்ளது. தற்போது இன்போசிஸ் பவுண்டேஷனின் தலைவராக இருக்கிறார் சுதா மூர்த்தி. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதியுள்ளார். அவை பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.