வயநாட்டில் நிலச்சரிவை தொடர்ந்து .. இன்று திடீர் நிலஅதிர்வு.. அச்சத்தில் மக்கள்!

Meenakshi
Aug 09, 2024,03:50 PM IST

திருவனந்தபுரம்:   வயநாட்டில் நிலச்சரிவைத் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 


கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாத இறுதியில்  நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய கிராமங்கள்   கடுமையாக பதிக்கப்பட்டன. வீடுகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தன.இந்த நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400க் கடந்து சென்றுள்ளது.  273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை. தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. 




பலரின் உடல் உறுப்புகள் மட்டும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்திய மக்கள் அனைவரையும் கதிகலங்கச் செய்துள்ளது.நாளை வயநாடு பகுதிக்கு பிரதமர் மோடி பார்வையிட வருவதாக தெரிவித்துள்ளார். பிரதமரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இன்று பேர் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


அதாவது வயநாடு மாவட்டத்தில் இன்று திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகே உள்ள குறிச்சியார்மலை, பிணங்கோடு மூரிக்காப், அம்புகுத்தி மலை, எடக்கல் குகைகளை சுற்றிய பகுதியில்  ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் இருந்து திடீர் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


நில அதிர்வு குறித்த புள்ளி விவரங்கள் பதிவாகாத நிலையில்,நில அதிர்வு உணரப்பட்ட பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நில அதிர்வால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இதற்கு முன்னர் இன்று காலை கேரளாவில் உள்ள மூணாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பாறைகள் உருண்டு ரோடுகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.