கர்நாடகாவுக்கு ரூ. 3454 கோடி.. தமிழ்நாட்டுக்கு ரூ. 276 கோடி.. "இது வன்மம்".. சு வெங்கடேசன் விமர்சனம்

Manjula Devi
Apr 27, 2024,05:11 PM IST

சென்னை: கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 2வது கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த மாநிலத்திற்கு திடீரென வறட்சி நிவாரண நிதியாக ரூ. 3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேசமயம், தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக கேட்டு வந்த வெள்ள நிவாரண நிதியை இது நாள் தராமல் இருந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்த நிலையில் ரூ. 276 கோடியை ஒதுக்கியுள்ளது.


இந்த நிதி ஒதுக்கீடு கடும் விமர்சனங்களையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது. கடந்த வருடம் கர்நாடகாவில் ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்தால் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் பரவலாக  பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டது.  பெங்களூரில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் வறட்சி நிவாரண நிதி கோரி மத்திய அரசை அணுகியது கர்நாடக அரசு. ஆனால் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.




இதையே இந்த லோக்சபா தேர்தலில் பிரச்சாரமாக கையில் எடுத்தது காங்கிரஸ். பாஜக அரசு கர்நடாகத்திற்குக் கொடுத்தது காலி சொம்புதான் என்று கூறி காங்கிரஸார் கையில் எடுத்த பிரச்சாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களின் பெரும் வரவேற்பையும் பெற்றது. காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியும் காலி சொம்பு பாஜக என்று கிண்டலடித்துப் பிரச்சாரம் செய்தார்.


இந்த நிலையில் வறட்சி நிவாரணப் பணிகளுக்காக ரூ. 35 ஆயிரத்து 162 கோடி உதவி கோரி  கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. வழக்கு விசாரணையின்போது கர்நாடக அரசுக்கு வறட்சி நிவாரணம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. அதன்படி, தற்போது கர்நாடகாவிற்கு ரூ. 3,454 கோடி நிவாரண நிதியை விடுவித்து உள்ளது.


கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.  2வது கட்ட தேர்தல் 14 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வறட்சி நிவாரண நிதி வந்து சேர்ந்துள்ளது. காங்கிரஸின் காலி சொம்பு கோஷத்தை முடக்கும் வகையில் இந்த நடவடிக்கைய மத்திய பாஜக அரசு எடுத்துள்ளதாக கருத்து எழுந்துள்ளது.


தமிழ்நாட்டுக்கு ரூ. 276 கோடி




இதற்கிடையே, தமிழ்நாட்டிற்கு மிச்சாங் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக 276 கோடியை ஒதுக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இரு விதமாக இந்த நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது -  மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 285 கோடியும், மழை வெள்ள பாதிப்புகளுக்கு ரூ. 397 கோடி நிதியுதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியிலிருந்து ரூ. 115.45 கோடியும், வெள்ள பாதிப்பு நிதியிலிருந்து ரூ. 160.61 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்ய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டுக்கு ரூ. 276 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. 


தமிழ்நாடு அரசும் வெள்ள நிவாரணம் கோரி ஏற்கனவே உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. இங்கு தேர்தலும் கூட முடிவடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆண்டு மிச்சாங் புயல் எதிரொலியாக வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடும் பாதிப்பை தமிழ்நாடு சந்தித்தது. இதனை சீர்படுத்த தமிழ்நாடு அரசு 38 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.  முதல்வர் மு க ஸ்டாலினும் டெல்லி சென்று  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து நிவாரணம் ஒதுக்குக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். 


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தமிழ்நாட்டுக்கு வந்து பார்வையிட்டும் சென்றனர். நிபுணர் குழுவும் வந்து போயிருந்தது. ஆனால் நிவாரண நிதி வழங்கப்படவில்லை. ஆனால் ஏற்கனவே நிதி வழங்கி விட்டோம் என்று  மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது.


இந்த நிலையில்தான், ரூ. 38 ஆயிரம் கோடி நிவாரண  நிதியை ஒதுக்குமாறு ஏற்கனவே தமிழ்நாடு அரசு கோரிவந்த நிலையில் இன்று ரூபாய் 276 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சு. வெங்கடேசன் கடும் விமர்சனம்




இதுகுறி்த்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவிப்பு.  தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி.  பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம் என்று சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.


இதேபோல பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.