சென்னையில் புறநகர் ரயில் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது.. வழக்கம் போல ஓடத் தொடங்கின!

Su.tha Arivalagan
Dec 07, 2023,10:15 AM IST

சென்னை:  புயல் மற்றும் கன மழை வெள்ளம் காரணமாக பாதிப்புக்குள்ளாகியிருந்த சென்னை புறநகர் ரயில் சேவை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இன்று முதல் வழக்கமான அட்டவணையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.


சென்னையை உலுக்கிய கடும் புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட கன மழை, தொடர்ந்து உருவான வெள்ளப் பெருக்கால் நகரிலும் புறநகர்களிலும் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளானது. ரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் ஸ்தம்பித்துப் போயின. நகரின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் முழுமையாக வடியாமல் உள்ளது.


இந்த நிலையில் புயலைத் தொடர்ந்து, சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் முழுவதும் ரயில் போக்குவத்து நிறுத்தப்பட்ட ரயில் சேவை பின்னர் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட்டு வந்தது. தற்போது ரயில்வே டிராக்குகள் அனைத்தும் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. இதனால் மீண்டும் ரயில் சேவை இயல்பு நிலைக்கு மாறியுள்ளது.




இன்று காலை முதல் வழக்கமான அட்டவணையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை தாம்பரம் - கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம் திருத்தணி,  வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் சேவை இயல்பாக தொடங்கியுள்ளது. 


சென்னை  கடற்கரை - சூலுர்ப்பேட்டை, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் வழக்கமான சேவைக்குப் பதில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் திருவொற்றியூர் - சூலூர்ப்பேட்டை, கும்மிடிப்பூண்டிக்கு அரை மணி நேர இடைவேளையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.