அதானியை கைகழுவப் போகிறது பிரதமர் மோடி அரசு.. சொல்கிறார் சுப்பிரமணியம் சாமி

Su.tha Arivalagan
Feb 03, 2023,09:21 AM IST

டெல்லி: அதானியால் எந்த லாபமும் இனி இல்லை என்பதால், அவரை மெதுவாக கை கழுவப் போகிறது பிரதமர் மோடி அரசு என்று கூறியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியம் சாமி.


அதானி நிறுவனம் தொடர்பாக அமெரிக்காவின் ஹின்டர்பர்க் நிறுவனம் சரமாரி புகார்களையும், குற்றச்சாட்டுக்களையும் வைத்ததைத் தொடர்ந்து அதானி குழுமம் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளது. பங்குச் சந்தையின் அதன் பங்குகள் தொடர்ந்து சரிவைக்  கண்டு வருகின்றன. உலகப் பணக்காரர்கள் வரிசையில் 15வது இடத்துக்குப் போய்விட்டார் அதானி.


வேகமாக மேலேறி வந்த அதானி இப்போது அதை விட பல மடங்கு வேகத்தில் பின்னோக்கி போக ஆரம்பித்து விட்டார். அதானி நிறுவனம் என்னாகுமோ என்ற பரபரப்பில் தொழில்துறை உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி அரசு, அதானியைக் கை கழுவ ஆரம்பித்துள்ளதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக சாமி போட்டுள்ள டிவீட்டில்,  அதானி தொடர்பான பாஜகவின் நம்பிக்கை போய் விட்டது. எனவே அவரை மோடி அரசு மெதுவாக கை கழுவ ஆரம்பித்து விட்டதாக நான் கருதுகிறேன். லகுவாக வந்தது லகுவாக போய்விடும் என்று கூறியுள்ளார் சாமி.


இன்னொரு டிவீட்டில், உடனடியாக அதானி சொத்துக்களை தேசியமயமாக்கி விட வேண்டும். அதன் பிறகு அவற்றை ஏலத்தில்விட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு அவர் ஆலோசனை கூறியுள்ளார்.