மதுரை மக்கள் என்னை கைவிட மாட்டார்கள் .. பலத்த நம்பிக்கையில் சு. வெங்கடேசன்!

Meenakshi
Jun 04, 2024,01:50 PM IST

மதுரை:  மதுரையில்  மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலையில் உள்ளார். இந்த நிலையில், மதுரை மக்கள் என்னை கைவிட மாட்டார்கள் என நம்புகிறேன் என்று சு. வெங்கடேசன் அடக்கமாக தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றியை நோக்கி பயணம் செய்து கொண்டுள்ளன. தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், அதிகப்படியாக திமுக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. 




அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று மதுரை. மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசன் 59,378 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் 37,198 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் 21,699 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும், நாதக  வேட்பாளர் மோ.சத்யாதேவி 16,595 வாக்குகள் பெற்று 4ம் இடத்திலும் உள்ளார்.


வெற்றி முகத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் மதுரை  மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நான்கு சுற்று முடிவுகளிலும் இந்தியா கூட்டணியில் உள்ள சு.வெங்கடேசன் ஆகிய எனக்கு மதுரை மக்கள் சுமார் 40,000 வாக்குகள் முன்னணி அளித்துள்ளனர். இதே சதவீதம் தான் தொடரும் என நினைக்கிறேன். 


முதல் சுற்றில் இருந்து 10,000 வாக்குகளாக முன்னேறிச் செல்கின்றோம். மதுரையில் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும். கடந்த முறை இருந்ததை விட இந்த முறை அதிக வாக்குகள் அளித்துள்ளனர். மிகச்சிறப்பாக அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. நிச்சயம் மோடி மீடியாக்கள் சொன்னதை மக்கள் தகர்த்துக் கொண்டு உள்ளார்கள் என்பது தான் வந்து கொண்டிருக்கிற செய்தி என்று கூறியுள்ளார்.


12வது சுற்றின் முடிவுப்படி  சு. வெங்கடேசன், 1,38,733 வாக்குகள் முன்னிலை பெற்று முன்னேறிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.