கலகலப்பு படத்தில் இடம் பெற்ற.. பேய் என்ற கேரக்டரில் நடித்த.. நடிகர் கோதண்டராமன் மறைவு!
சென்னை: பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், காமெடி நடிகருமான கோதண்டராமன்(65) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
சிறுவயதிலிருந்த கராத்தே போன்ற கலைகளில் சிறந்து விளங்கியவர் கோதண்டராமன். ஸ்டண்ட் யூனியனில் சேர்ந்து சண்டைக் கலைஞராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். கடந்த 25 வருடமாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக, மாஸ்டராக பணிபுரிந்து வந்தார் கோதண்டராமன்.
எல்லாமே என் ராசாதான், ஒன்ஸ்மோர், எல்லாமே என் பொண்டாட்டி தான் போன்ற முக்கிய நட்சத்திரங்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். அதன் பின்னர் சிறு சிறு வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக காமெடி காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு திரைப்படத்தில் சந்தானம் கூட்டணியில் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானவர். இவர் இயற்கையாகவே உடல் பருமனாக காணப்படுவதால் பேய் என்ற கதாபாத்திரத்தில் காமெடி செய்து நடித்திருந்தது பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பு பெற்றது. சந்தானத்துடன் படம் முழுக்க வரும் கேரக்டர் இது. இதுதவிர வேறு பல படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார் கோதண்டராமன்
சென்னை பெரம்பூரில் வசித்து வந்த கோதண்டராமன் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று அவரது இல்லத்தில் அவர் காலமானார். இவருடைய மறைவுக்கு திரை நட்சத்திரங்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்