மீண்டும் திறப்பு.. பள்ளிகளைத் தேடி வந்த மாணவச் செல்வங்கள்.. தமிழ்நாடு முழுவதும் உற்சாகம்!

Manjula Devi
Jun 10, 2024,10:06 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. வெயில் குறைந்து, பெரிய அளவில் வெப்பம் இல்லாததால், மாணவ மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.


தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டு  கடந்த ஏப்ரல் 24ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். இதனை அடுத்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 




தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து  பள்ளிகளும்  இன்று முதல்  திறக்கப்பட்டன. முன்கூட்டியே,  பள்ளிகளை சுத்தம் செய்தல், ஆய்வகங்களை சீர்படுத்துதல், கழிவறைகள், பழைய கட்டிடங்களை சீர் செய்தல், உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் பள்ளி நிர்வாகங்கள் செய்திருந்தன.  இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.


மாணவ மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்குச் சென்றனர். புதிதாக பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்களுக்கு, ஆசிரியர்கள் இனிப்புகள் கொடுத்தும், பூக்கல் கொடுத்தும் வரவேற்றதால் மாணவ மாணவியர் ஹேப்பியானார்கள். இன்று பள்ளிகள் திறக்கும் முதல் நாளான இன்றே 70 லட்சத்து 67 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் 60 லட்சத்து 75 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், 8,22,000 மாணவ மாணவிகளுக்கு புவியியல் வரைபடங்களும் வழங்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இது தவிர நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் திறனை அதிகரிக்கவும், மாணவர்களிடம் புத்தக வாசிப்பு திறனை அதிகரிக்க மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நூலகங்களில் சென்று புத்தகங்களை படிக்க புதிய பாடவேளை பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படிப்பது மட்டுமின்றி மாணவர்களின் தனித் திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை மேம்படுத்தவும் அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித்தரவும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் காலை உணவு திட்டம் மூலம் சரிவிகித உணவு மாணவர்களிடம் சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்கவும் மாவட்ட முதன்மை கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.