ஜூன் 10ல்.. மீண்டும் பள்ளிக்கு போகலாம்.. ஆயத்தமாகும் மாணவ மாணவிகள்.. காத்திருக்கும் வகுப்பறைகள்!

Manjula Devi
Jun 07, 2024,06:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. மீண்டும் பள்ளிக்குச் செல்ல மாணவ மாணவிகள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்காக மீண்டும் ஒடுவதற்கு பெற்றோர்கள் ரெடியாகி வருகின்றனர். 


அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்களும் மாணவ, மாணவியரை வரவேற்க ஆயத்த நிலையில் உள்ளன.


தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என ஏற்கனவே தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் கடும் வெயில் அடித்து வந்ததால், வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என  பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற தமிழக அரசு மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசு சார்ந்த பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், அனைத்தும் ஜூன் 10 ஆம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.




இதையடுத்து பள்ளிகள் அனைத்தும் வருகிற 10ம் தேதி திறக்கப்படவுள்ளன. சில தனியார் பள்ளிகள் 12ம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் திறக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.


இதன்படி ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பிற்கு அனைத்து பள்ளிகளும் தூய்மை  பணிகளை மேற்கொள்ளுதல், பள்ளிகளை சுத்தம் செய்தல், பள்ளிக் குழந்தைகள் செல்லும் வாகனங்களை உரிய கட்டுப்பாடுடன் தயார் செய்தல், உள்ளிட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 6ம் தேதியை மனதில் கொண்டு பல பள்ளிகளில் தேவையான முன்னேற்பாடுகள் முன்பே செய்யப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட அனைத்து பள்ளிக்கூடங்களும் தயார் நிலையில் உள்ளன. பள்ளிப் பேருந்துகளின் பாதுகாப்பு நிலை குறித்த ஆய்வுகளை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கிட்டத்தட்ட முடித்து விட்டனர். எனவே பள்ளிப் பேருந்துகளும் கூட தயார் நிலையில் உள்ளன.


மறுபக்கம், பள்ளிகள் திறக்க இன்னும் இரண்டு நாட்களை உள்ளதால், பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். புது ஸ்கூல் பேக், லன்ச் பேக், வாட்டர் பாட்டில் உள்ளிட்டவற்றை வாங்கும் வேலை மும்முரமாக போய்க் கொண்டிருக்கிறது. அதேபோல ஸ்கூலில் கொடுத்த நோட்புக்குகள், புத்தகங்களுக்கு அட்டை போடுவது, லேபிள் ஓட்டுவது என்று அதிலும் பிசியாக உள்ளனர்.


இதுதவிர, மாணவ மாணவிகள் முதல் நாள் பள்ளிக்கு வரும்போது அவர்களுக்கு பூ கொடுத்து வரவேற்பது  உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளையும் பல பள்ளி நிர்வாகங்கள் செய்து வருகின்றன.  இந்த முதல் நாள் வழிகாட்டல் தான் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நல்ல சூழ்நிலையில் கல்வி கற்கும் மன நிலைமையை உருவாக்கித் தருகிறது. அதனால் தான் மாணவர்கள் முதல் நாளில் பள்ளிகளுக்குச் செல்லும் போது மகிழ்ச்சியுடன்  கல்வி கற்க ஆசிரியர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


பிறெகன்னப்பா பசங்களா.. ஜாலியா ரெடியாகுங்க.. ஜம்முன்னு போய் படிங்க.. all the best!