உச்சகட்டமாக உணர்ச்சிவசப்பட்ட  அனுமன் வேடம் போட்ட கலைஞர்.. மேடையிலேயே உயிரிழந்த சோகம்!

Manjula Devi
Jan 23, 2024,04:00 PM IST

சண்டிகர்: அயோத்தியில் நேற்று  ராமர் கோவில் திறப்பையொட்டி ஹரியானாவில் நடந்த கலை நிகழ்ச்சியின்போது அனுமன் வேடம் போட்டவர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக மேடையிலேயே உயிரிழந்தார்.


அயோத்தி கோவில் பால ராமர் சிலை பிரதிஷ்டை நேற்று மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த பால ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி கோயில் முழுவதும் மலர்தூவப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், முன்னணி சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், யோகிகள், என அனைவரும்  கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். 




இந்நிலையில் ஹரியானா மாநிலம் பிவானியில் ராம்லீலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு கலைஞர்கள் வேடம் அணிந்து ஆடல் பாடல் என மகிழ்ந்து கொண்டிருந்தனர். அதில் அனுமன் வேடம் அணிந்து கலைஞர் ஹரிஷ்மிதா என்பவர் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஹரிஷ் மேத்தா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே கீழே விழுந்து உயிரிழந்தார். ஆனால் அதை அங்கிருந்த யாரும் உணரவில்லை. அவர் தத்ரூபமாக நடிக்கிறார் போல என்று நினைத்து தொடர்ந்து பஜனை பாடிக் கொண்டிருந்தனர். நேரம் சென்று கொண்டே இருந்தது. நீண்ட நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. 


இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் அவர் எழுந்திருக்காமல் இருப்பதை உணர்ந்து பதறிப் போய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர். ராம்லீலா நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கலைஞர் ஹரிஷ் மேத்தாவின் இறப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.