ரம்ஜான் உதவிகளை வாங்க அடித்துப் பிடித்த கூட்டம்.. 80க்கும் மேற்பட்டோர் பலி
Apr 20, 2023,09:49 AM IST
சனா: ஏமன் நாட்டில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியதால் 80க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியானார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
போரால் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டில் வறுமையும், ஏழ்மையும் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் தற்போது ரம்ஜான் பண்டிகை வருவதால், பல்வேறு பகுதிகளிலும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
அதேபோல தலைநகர் சனாவில், ஒரு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய அளவில் மக்கள் கூடினர். கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் இருந்ததால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். ஒரு கட்டத்தில் மக்கள் உதவிப் பொருட்களை வாங்க அடித்துப் பிடித்துக் கொண்டு மோதியதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. இறந்தவர்களில் பலரும் பெண்கள், குழந்தைகள்தான் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. சம்பவம் நடந்த இடம் ஒரு பள்ளிக்கூடமாகும். சிறிய பள்ளியான அதில் மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியதால்தான் நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சம்பவம் நடந்த பகுதி அரசின் பிடியில் இல்லை. மாறாக, போராளிகளிடம்தான் உள்ளது. அவர்கள்தான் உதவித் திட்டங்களுக்கு அனுமதி அளித்து வருகிறார்கள். ஆனால் போதிய பாதுகாப்பும், வழிகாட்டுதலும் இல்லாததாலும், மக்கள் சாப்பிடக் கூட பொருட்கள், உணவு இல்லாமல் சிரமப்படுவதாலும் அடித்துப் பிடித்துக் கொண்டு முன்னேறியுள்ளனர். இதுதான் நெரிசலுக்கும்,உயிரிழப்புக்கும் காரணமாகி விட்டது.
நிகழ்ச்சிக்கு போதிய ஏற்பாடுகளைச் செய்யாதவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டில் கடந்த 8 வருடமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. உலகிலேயே மிகப் மோசமான மனிதப் பேரழிவு ஏமன் நாட்டில் நடந்து வருவதாக ஏற்கனவே ஐ.நா. சபை கூறியுள்ளது. இங்கு வறுமை, ஏழ்மை மட்டுமல்லாமல் பட்டினிச் சாவுகளும், மருந்து மாத்திரி கிடைக்காமல் சாவோரும் அதிக அளவில் உள்ளனர்.
2014ம் ஆண்டு நடந்த பயங்கர மோதலின்போது, ஈரான் ஆதரவுடன் ஹூதி போராளிகள் தலைநகர் சனாவைக் கைப்பற்றிக் கொண்டனர். அன்று முதல் அவர்கள்தான் ஏமன் அரசு நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு முற்பாதி வரை கடுமையான சண்டையில் சிக்கித் தவித்து வந்தது ஏமன். அதன் பிறகு ஐ.நா. தலையீட்டீன் பேரில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து தற்போது சண்டை சற்று ஓய்ந்துள்ளது. இருந்தாலும் நாடு இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை.