போதைப் பொருள் வழக்கில்.. கைதான எஸ்ஆர்எம் மாணவர்களில் ஒருவர் தற்கொலை.. அதிர்ச்சியில் சக மாணவர்கள்!
சென்னை: சமீபத்தில் எஸ்ஆர்எம் கல்லூரியில் நடந்த போதைப்பொருள் ரெய்டைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆந்திர மாநில மாணவர் ஒருவர் தற்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துள்ளார். சக மாணவர்களிடையே இது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்துதல் அதிகரித்து வந்த நிலையில் இதனை சுட்டிக்காட்டி பல்வேறு அரசியல் கட்சி சார்ந்த தலைவர்கள் கடும் விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். இது தவிர கல்லூரியில் மட்டுமல்லாமல் பள்ளிகளிலும் கூட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக பெற்றோர்களும் புகார்களை தெரிவித்து வந்தனர் .
இதன் காரணமாக சமீப காலமாக தமிழக முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் தொடர்பான தேடுதல் வேட்டையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை அருகே உள்ள மிக பிரபலமான எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து 500க்கும் மற்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, பல்வேறு வகையான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் கைதாகி பின்னர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். இந்த வழக்கு விவகாரம் தெரிந்து அவரது பெற்றோர் மாணவரைத் தொடர்பு கொண்டு கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்குள்ளான அந்த மாணவர் தற்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதனையடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்