ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பரிதாபம்.. மினி பஸ் கவிழ்ந்து விபத்து.. மாணவர்கள் உட்பட 4 பேர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் இன்று காலை 40 மேற்பட்ட பயணிகளுடன் தனியார் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் பஸ்ஸில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பயணித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் பஸ் சாலையை விட்டு பல அடிதூரம் இழுத்துச் செல்லப்பட்டது.இதனால் மினி பஸ்ஸிசில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.
இந்த அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மினிபஸ்ஸில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். மேலும் இந்த விபத்தில் 12ம் வகுப்பு மாணவரான மம்சாபுரம் காந்தி நகர் குருசாமி மகன் நிதிஷ் குமார் (17), ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரி மாணவரான மம்சாபுரம் மீனாட்சி தோட்ட தெரு கோவிந்த் மகன் சதீஷ்குமார் (20), 10ம் வகுப்பு மாணவரான மம்சாபுரம் மேலூரை சேர்ந்த செல்வராஜ் மகன் வாசுராஜ் (15), கலசலிங்கம் பல்கலைக் கழக ஊழியரான குருசாமி மகன் மாடசாமி (28) ஆகிய 4பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த 4 பேரின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த 30க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் சாலைகள் குறுகலாக இருந்ததினால் தான் விபத்து நடந்துள்ளதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலையை விரிவு படுத்த கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்