Happy News: ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட பெண்ணுக்கு.. அழகான ஆண் குழந்தை பிறந்தது!
Dec 20, 2023,10:35 AM IST
மதுரை: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவித்துக் கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணி அனுசுயா மயில், ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை ஆட்டிப் பார்த்து விட்ட வெள்ளம் மற்றும் கன மழையின் பாதிப்பிலிருந்து வெளியே வர பல நாட்களாகும். இந்த பரபரப்பான தருணங்களில் யாராலும் மறக்க முடியாதது, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக் கொண்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்தான்.
கிட்டத்தட்ட 3 நாட்கள் அந்த ரயில் ஒரே இடத்திலேயே நின்றிருந்தது. எந்தப் பக்கமும் நகர முடியாத நிலையில் சிக்கிக் கொண்ட ரயிலில் 800 பயணிகள் பரிதவித்தனர். 300 பேர் வேகமாக மீட்கப்பட்ட நிலையில் வெள்ளம் அதிகரித்து விட்டதால் மற்றவர்களை மீட்க முடியாத நிலை. நேற்றுதான் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நேற்று காலை அனுசுயா மயில் உள்ளிட்ட 4 பேர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இதில் அனுசுயா மயில், நிறைமாத கர்ப்பிணி ஆவார். பத்திரமாக மீட்கப்பட்ட அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். அவருக்கு விமான நிலையத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரை மதுரை அரசினர் ராஜாஜி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுசுயா மயிலை பத்திரமாக மீட்டு, அவருக்கு பிரச்சினை இல்லாமல் பிரசவம் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அவரது குடும்பத்தினர் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.