ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 2023 : பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு

Aadmika
Dec 23, 2023,08:41 AM IST

ஸ்ரீரங்கம் : வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, நம்பெருமாள் காட்சி அளித்தார்.


பூலோக வைகுண்ட என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 12 ம் தேதி துவங்கியது. திருநெடுந்தாண்டவம் வைபவத்துடன் பகல் பத்து உற்சவம் துவங்கியது. இதில் நாள்தோறும் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் இசைக்கப்பட்டு வந்தன. வைகுண்ட ஏகாதசி விழாவின் பத்தாம் நாளான நேற்று உற்சவமூர்த்தியான நம்பெருமாள், மோகினி அலங்காரம் என சொல்லப்படும் நாச்சியார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 


இதைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 23) அதிகாலை சரியாக 4 மணியளவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு "ஸ்ரீரங்கா...கோவிந்தா" என முழக்கமிட்டனர். அப்போது சொர்க்க வாசல் வழியாக, ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை அணிந்து வந்து நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நம்பெருமாள் உடன் சேர்ந்து பக்தர்களும் சொர்க்கவாசலை கடந்து சென்று, மூலவர் ரங்கநாதரை தரிசித்தனர்.




ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்த பகல் பத்து உற்சவம் இன்றுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து இரா பத்து உற்சவம் டிசம்பர் 24ம் தேதியான நாளை துவங்கி, அடுத்த 10 நாட்கள் நடைபெறும். அதற்கு பிறகு நடைபெறும் தீர்த்தவாரியை தொரட்ந்து ஜனவரி 02 ம் தேதி நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் உற்சவத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும். 


வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலின் ஏழு பிரகாரங்களும், ராஜகோபுரமும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதை பலர் ஏரியல் வ்யூவாக படம் எடுத்தும் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டனர். இதைக் கண்ட பக்தர்கள் பலர், நிஜமாகவே ஸ்ரீரங்கம் கோவிலை தற்போது பார்க்கும் போது பூலோக வைகுண்டம் என்று தான் சொல்ல தோன்றுகிறது என கருத்து தெரிவித்தனர்.