இலங்கை நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியது.. ஜனாதிபதி அனுரா திசநாயக்கேவின் கட்சி.. 123 இடங்களில் வெற்றி!

Manjula Devi
Nov 15, 2024,10:59 AM IST

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 


இலங்கையில்  17 வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. 225  தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு  113 தேவைப்படுகிறது. 196 உறுப்பினர்களை தேர்வு செய்யவே நேற்று இலங்கை மக்கள்  வாக்களித்தனர். மீதமுள்ள 29 இடங்கள் வாக்கு சதவிகித அடிப்படையில் மற்ற கட்சிகளுக்கு வழங்கப்படும்.




தேர்தலில் அரசியல் கட்சி சார்ந்த 5,464 வேட்பாளர்களும், 3357 சுயோச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 8821 பேர் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஆளும் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஜனாதிபதி அனுராவின் கட்சி தலைமையிலான கூட்டணி இது.


தேசிய மக்கள் சக்தி கட்சி இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 62.59 சதவீதம் வாக்குகளை பெற்று 123 இடங்களில்  வெற்றி பெற்று நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ளது. அதேபோல் சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 17.8% வாக்குகளை பெற்று, 31 இடங்களை கைப்பற்றியுள்ளது. தமிழர் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி, புதிய ஜனநாயக முன்னணி கட்சி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்  அநுரா குமார திசநாயக்க இலங்கையின் அதிபராக வெற்றி பெற்றார் என்பது நினைவிருக்கலாம். அதேபோல் நாடாளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்