நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர்!

Su.tha Arivalagan
Oct 12, 2023,10:39 AM IST
வெல்லிங்டன்: நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை வம்சாவளித் தமிழரான செந்தூரன் அருளானந்தம் போட்டியிடுகிறார்.

இலங்கையைப் பூர்வீமாகக் கொண்ட செந்தூரன் அருளானந்தம் ஒரு பொறியியல் ஆலோசகர் ஆவார். தேசியக் கட்சி சார்பில் அவர் தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் செந்தூரன் அருளானந்தம் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து நாட்டில் வரும் சனிக்கிழமை (14.10.2023) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தலைமையிலான ஆளும் தொழில் கட்சிக்கும் எதிர்க்கட்சியான தேசியக் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.





இரு கட்சிகளும் கடும் மோதலில் இருப்பதால் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சிறு கட்சிகளின் துணையுடன் ஆட்சியமைக்க தேசியக் கட்சிக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த பொதுத் தேர்தலில் தேசியக் கட்சி சார்பாக செந்தூரன் அருளானந்தம்  போட்டியில் உள்ளார். செந்தூரன் அருளானந்தம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் பல்வேறு கட்டுமாணப் திட்டங்களில்  அலோசகராக பணியாற்றி உள்ளார். அத்துடன், நியூசிலாந்தில் பல்வேறு  சமூகப் பணிகளிலும் அவர் ஈடுபட்டு உள்ளார்.  யாழ்ப்பாணம், தூய  ஜான்ஸ் கல்லூரி, கொழும்பு ராயல் கல்லூரிகளில் இவர் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.