இலங்கை நாடாளுமன்றம் அதிரடி கலைப்பு.. நவம்பர் 14ம் தேதி தேர்தல்.. புதிய ஜனாதிபதி அனுரா உத்தரவு
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடத்த புதிய ஜனாதிபதி அனுரா குமார திசநாயகே உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அனுரா பதவியேற்றுள்ளார். இடதுசாரி தலைவரான அனுரா பதவியேற்றதும் தற்போது நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் அனுராவின் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிக்கு 3 உறுப்பினர்களே உள்ளனர். இருப்பினும் ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வெற்றியைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்திலும் தனது கட்சியை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க வைக்க அனுரா திட்டமிட்டுள்ளார்.
நேற்று தற்காலிக பிரதமராக ஹரினி அமரசூரியாவை நியமித்த அனுரா தற்போது நாடாளுமன்றத்தையும் கலைத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளார். தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் தான் நினைத்ததை சாதிக்க முடியும் என்று அனுரா கருதுகிறார். பொருளாதார சீர்திருத்தங்களே அவரது முதல் முன்னுரிமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இடதுசாரி தலைவராக இருப்பதால் அவரது முதல் சாய்ஸ் சீனாவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் உதவியைப் பெரிய அளவில் பெற்று நாட்டை ஸ்திரப்படுத்த அவர் முயலக் கூடும். அதேசமயம், இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல் இந்தியாவுடனும் நல்லுறவை பேண அவர் முயல்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ரணில் விக்கிரமசிங்கே இருந்தபோது இந்தியா மிகப் பெரிய அளவில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்க கடன் உதவிகளை வழங்கியுள்ளது என்பது நினைவிருக்கலாம். ஆனால் அனுராவின் அப்ரோச் எந்த அளவுக்கு இருக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும். ஒரு வேளை அனுரா இந்தியாவுக்கு எதிர் திசையில் போக முயற்சித்தால், தமிழ்நாட்டு மீனவர்கள் விவகாரத்தை மிகப் பெரிய அளவில் மத்திய அரசு கையில் எடுத்து இலங்கைக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கச்சத்தீவையும் கைப்பற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கலாம்.
கடைசியாக 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்றது. அதன் ஆயுள் காலம் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் வரை உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்