"அது.. அந்தப் பயம் இருக்கணும்"... மனிதர்களைக் கண்டாலே மிரளும் சிலந்திகள்!

Su.tha Arivalagan
Jan 05, 2024,12:42 PM IST

நாட்டிங்காம்: சிலந்திகள் குறித்த ஒரு ஆய்வில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது மனிதர்களைப் பார்த்து சிலந்திகள் ரொம்பவே பயப்படுகின்றனவாம்.  தாங்கள் வலை பின்னிய இடத்தில் மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இருந்தால் சட்டுப் புட்டென்று அந்த இடத்தை காலி செய்து விட்டு ஓடி விடுகின்றனவாம்.


உலகிலேயே மிகவும் கிரியேட்டிவான ஒரு உயிர் என்றால் அது சிலந்திதான். அது பின்னும் வலைக்கு நிகரான வேலைப்பாடு மனிதர்களிடம் கூட கிடையாது. அப்படி அருமையாக வலை பின்னும் சிலந்தி.. நம்மாட்கள் என்ன பண்ணுவோம்.. ஒரு குச்சியை எடுத்து அந்த வலையை பிச்சு விடுவோம்.. வலை பிய்ந்து அந்த சிலந்தி சிரமப்பட்டு தப்பி ஓடுவதைப் பார்ப்பதற்கு நம்மாட்களுக்கு ஒரு அலாதிப் பிரியம்!




உண்மையில் மனிதர்ளைக் கண்டாலே சிலந்திகளுக்கு நடுக்கம் வந்து விடுகிறதாம். மனித வாசனையை நுகர்ந்தாலே அந்த இடத்தை விட்ட கிளம்பும் முடிவுக்கு அவை வந்து விடுகிறதாம். இதனால்தான் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் சிலந்தி அதிக அளவில் வலை பின்னி அங்கு வசிக்கிறதாம்.


உள்ளங்கை அளவே உள்ள Trichonephila clavata எனப்படும் சிலந்தியை வைத்து அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த வகை சிலந்திகள் கிழக்கு ஆசியாவில் அதிகம் உள்ளன.  ஆனால் கடந்த 10 வருடங்களில் கிழக்கு ஆசியாவில் குறைந்து விட்டது. மாறாக அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. இந்த வகை சிலந்திகளின் முன்னோடியான  Trichonephila clavipes ஏற்கனவே அமெரிக்காவில் கடந்த 160 வருடங்களாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.


clavata வகை சிலந்திகளுக்கு மனிதர்களைக் கண்டாலே நடுக்கம் வந்து விடுமாம். உடனே செத்துப் போனது போல அவை நடிக்க ஆரம்பித்து விடுமாம். மனிதர்கள் மட்டும் இல்லாமல், தேள் போன்ற அபாயகரமான எதிரிகளைப் பார்த்தாலும் கூட இவை செத்துப் போனது போல நடித்து நாடகமாடுமாம்.  இது விலங்குகள், பூச்சிகளிடையே காணப்படும் ஒரு இயல்பான உத்திதான் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.


உயிர் தப்புவதற்கு மட்டும் என்று இல்லாமல் தனது ஜோடியைக் கவருவதற்கும் கூட இந்த டெக்னிக்கை சிலந்திகள் குறிப்பாக ஆண் சிலந்திகள் பயன்படுத்துகின்றனவாம்.  கிட்டத்தட்ட ஒரு நிமிடம் வரை கூட இவை அசைவே இல்லாமல், மூச்சு கூட விடாமல் நடிக்குமாம்.  இதில் ஜோரோ ஸ்பைடர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை கூட செத்துப் போனது போல நடிக்குமாம்.




செத்துப் போனது போல நடித்தால் தங்களது எதிரிகள் தங்களைக்  கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள் என்பதால் இந்த உத்தியை இந்த சிலந்திகள் பயன்படுத்துகின்றனவாம்.  அதேபோல எதிரிகளிடமிருந்து தப்புவதற்காக பிற பூச்சிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் உத்திகளையும் சிலந்திகள் பயன்படுத்துகின்றனவாம். சில நேரங்களில் தங்களை விட சிறிய பூச்சி ஏதாவது வந்து விட்டால் தங்களது கால்களை அசைத்து அவற்றை பயமுறுத்துமாம். 


மனிதர்களின் பொதுவான எண்ணம் என்னவென்றால் சிலந்திகள் நமக்கு எதிரானவை, நம்மை அவை கடித்தால் விஷம் என்றுதான் பொதுவாக கருதுகிறோம். ஆனால் உண்மையில் சிலந்திகள்தான், மனிதர்களைப் பார்த்துப் பயப்படுகிறதாம். சிலவகை சிலந்திகள் கடித்தால் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் என்பது உண்மைதான். ஆனால் அவற்றால் உயிர் போகும் வாய்ப்பெல்லாம் கிடையாது. உண்மையில் சிலந்திகள் நம்மைக் கண்டால்தான் ஓடுகின்றனவாம். நாமாகப் போய்  தொல்லை கொடுக்கும்போதுதான் அவை நம்மை சீண்டுகின்றனவாம்.