பயணிகளின் கவனத்திற்கு.. ஜனவரி 19ம் தேதி மண்டபத்திலிருந்து சென்னைக்கு.. சிறப்பு ரயில் இயக்கம்!
சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை மறுநாள் ஜனவரி 19ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு சென்று ஊர் திரும்பும் சென்னை மக்களுக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. அதன்படி மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமான மக்கள் சென்றுள்ளனர். தற்போது பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், அவர்கள் அனைவரும் ஊர் திரும்புகின்றனர். இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கூட்ட நெரிசலில் இருந்து பயணிகள் எளிதாக ஊர் திரும்புவதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
அந்த வகையில் ராமநாதபரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் 06048 என்ற எண் கொண்ட ரயில் இயக்கப்பட உள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சீர்காழி வழியாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. படுக்கை வசதியுடன் 9 பெட்டிகள், ஏசி வசதியுடன் 3 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகளுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. இந்த ரயில் மண்டபத்தில் இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை எழும்பூருக்கு காலை 11.30க்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் நேற்று இரவு முதல் சென்னைக்குத் திரும்பி வர ஆரம்பித்துள்ளனர். இதனால் சென்னையின் எல்லைப் பகுதியான பெருங்களத்தூர், கிளாம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் தொடங்கி விட்டது. நாளை மிகப் பெரிய அளவிலான மக்கள் கூட்டம் சென்னையை நோக்கி கிளம்பி வரும் என்பதால் மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணங்களை மேற்கொள்வது அவரவர் இடங்களுக்கு உரிய நேரத்தில் போய்ச் சேருவதற்கு உதவியாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்