ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை நிறைவேற்ற.. இன்று சட்டசபை சிறப்புக் கூட்டம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் , திமுக அரசுக்கும் இடையே சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்திருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது. ஆளுநரின் இந்த செய்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தமிழ்நாடு அரசு கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை, கவலைக்குரியவை. ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் அல்ல. மசோதாக்களை நிறுத்தி வைக்க அவருக்கு அதிகாரம் இல்லை. ஒப்புதல் தர வேண்டும் அல்லது அரசிடமே திருப்பி அனுப்ப வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஆளுநர் ஆர். என். ரவி தன்வசம் கிடப்பில் கிடந்த 10 மசோதாக்களை விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதையடுத்து இவற்றை மீண்டும் சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றி மறுபடியும் ஆளுநருக்கே அனுப்ப திமுக அரசு அதிரடி முடிவெடுத்தது. அதன்படி சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் 10 மசோதாக்களையும் மீண்டும் தாக்கல் செய்து அவற்றை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை அரசு சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்தால் அதை ஆளுநரால் திருப்பி அனுப்பவோ அல்லது நிராகரிக்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படித்தான் நீட் மசோதாவும் முதலில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் அரசு மீண்டும் அதை நிறைவேற்றி மறுபடியும் ஆளுநருக்கு அனுப்பியது. இதையடுத்து வேறு வழியில்லாமல் அதை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் என்பது நினைவிருக்கலாம்.