சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

Meenakshi
Apr 07, 2025,05:39 PM IST

சென்னை: சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுத்ததை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.


தமிழக சட்டசபையில் இன்றைய நிகழ்வின் போது அதிமுக எம்.எல்.ஏ., க்கள் அந்த தியாகி யார்? என பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக்கில் 1,000 கோடி ஊழல் என்ற புகார் எழுந்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் கேள்வி கேட்க அனுமதி கேட்டார்.




அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கை பேச அவையில் அனுமதி இல்லை என அனுமதி மறுத்தார். டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச எடப்பாடி பழனிசாமி முயற்சித்தார்.  எடப்பாடி பழனிசாமி பேசுவது அவைக்குறிப்பில் பதிவேற்ற முடியாது என சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்தார். இதனை அடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.


இதனையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ., க்கள் அவையில் இருந்து வெளியேற்றினர்.  அவையில் இருந்துவெளியேறிய அதிமுக எம்.எல்.ஏ.,க்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.