ஸ்பெயின் பயணம் நிறைவு.. "மிகப் பெரிய சாதனைப் பயணமாக முடிந்தது".. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Meenakshi
Feb 07, 2024,06:23 PM IST

சென்னை: ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். ஸ்பெயின் பயணம் சாதனை பயணமாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


தமிழக முதல்வர் ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார். தமிழகத்திற்கு  முதலீடுகளை ஈர்க்கும் விதமாக  முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அரசு முறை பயணமாக கடந்த 27ஆம் தேதி ஸ்பெயின் சென்றார்.அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் தொழில் துறை அமைச்சரும் சென்றிருந்தனர்.


இன்று சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் மு. க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  பேசுகையில்,  தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்து திரும்பி இருக்கிறேன். ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்து இருக்கிறது. ஸ்பெயினில் முதன் முதலில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. 




ஸ்பெயின் நாட்டில் செயல்படும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்தேன். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டக்கொண்டேன். காற்றாலை மின் உற்பத்தி, நீர் மறுசுழற்சியின் முன்னணி நிறுவனம் ஆசியானா,ரோக்கா நிறுவனம், ஹபக் லாய்டு நிறுவனம், அபர்ட்டிஸ் நிறுவனம், கஸ்டாம்ஸ் நிறுவனம்,டால்கோ நிறுவனம், எடிவான் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின்  நிர்வாகிகளுடன் ஆலோசித்தேன். 


தமிழ்நாட்டில் ரூபாய் 3440 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளப்பட்டன என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஹபக் லாய்டு நிறுவனம் ரூ.2500 கோடி முதலீடு, அபர்ட்டிஸ் நிறுவனம் ரூ. 540 கோடி முதலீடு, ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளன. மற்ற நிறுவனங்களும் முதலீடு மேற்கொள்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது. 


உற்பத்தி மாற்றத்தில் சீனாவிற்கு மாற்றாக இந்தியா கருதப்படும் இந்த வேலையில், அந்த உற்பத்தி துறையில் தமிழ்நாடு முன்னேறி வருகிறது. தமிழ் நாட்டை தொழில் துறையில் தலை சிறந்த மாநிலமாக உயர்ந்தும் எங்கள் பயணம் மிக மிக பயனுள்ளதாக அமைந்தது. இது போன்ற அடுத்த பயணங்களும் திட்டமிடப்படும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் அடுத்த பயணம் தொடரும் என்று கூறியுள்ளார்.