எஸ்.பி.பி. வாழ்ந்த வீடு உள்ள காம்தாநர் நகர் மெயின் ரோடுக்கு அவரது பெயர்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Sep 25, 2024,06:17 PM IST

சென்னை: மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீடு உள்ள சென்னை காம்தார் நகர் மெயின் ரோடுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தனது தேன் சுவைக் குரலால் தென்னகத்தை மட்டுமல்லாமல் மொத்த இந்தியாவையும் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் எஸ்பிபி என்று அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தாய் மொழி தெலுங்கு முதல் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் எஸ்பிபி. முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ளாமலேயே அதன் அடிப்படையில் அமைந்த பாடல்களைப் பாடி தேசிய விருதும் பெற்று அசத்தியவர்.


தென்னகத்தின் குரலாக மட்டுமல்லாமல் தேசியக் குரலாகவும் மாறிப் போயிருந்தவர் எஸ்பிபி. அவரது காதல் சுவை சொட்டும் பாடல்களும், சோகப் பாடல்களும், துள்ளல் பாடல்களுக்கும் ஈடு இணையே இல்லை. இப்படி ரசிகர்களையும், மக்களையும் மகிழ்வித்து வந்த எஸ்பிபி, கடந்த 2020ம் ஆண்டு கொரோனாவால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு காரணமாக மரணத்தைத் தழுவினார்.




இன்று அவரது நினைவு நாளாகும். இதையொட்டி அவரது ரசிகர்கள் எஸ்பிபிக்கு புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள் உள்பட பல்வேறு வழிகளிலும் எஸ்பிபியை ரசிகர்கள் நினைவு கூர்ந்து அவரது புகழைப் பரப்பி வருகின்றனர். முன்னதாக எஸ்பிபி வசித்து வந்த காம்தார் நகர்  பகுதி அல்லது தெருவுக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்று அவரது குடும்பத்தின் சார்பில் எஸ்பிபியின் மகன் சரண் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தார்.


இந்த மனுவைப் பரிசீலித்த முதல்வர் தற்போது எஸ்பிபியின் வீடு உள்ள காம்தார் நகர் மெயின் ரோடுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை என பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் விடுத்துள்ள அறிவிப்பில், பாடும் நிலா #SPBalasubrahmanyam அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். விரைவில் இந்த பெயர் முறைப்படி திறந்து வைக்கப்படும் என்று தெரிகிறது. 


பாடும் நிலா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட எஸ்பிபி வசித்த பகுதி இனி அவரின் பெயரைப் பாடிக் கொண்டே இருக்கும்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்